கோவை; வெள்ளியங்கிரி மலைக்கு வழிபாட்டுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள சூழலில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை வனம் மற்றும் அறநிலையத்துறை இணைந்து ஏற்படுத்தியுள்ளது.
கோவைமேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலைக்குபிப்.,முதல் வாரத்தில் மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில் அன்றாடம் 50,000 பக்தர்கள் மலையேற்றம் மேற்கொள்கின்றனர்.
வரும் பிப்.,26 அன்று மஹா சிவராத்திரி முதல் சித்ரா பவுர்ணமி வரை அதிக அளவிலான பக்தர்கள் மலை ஏற்றம் மேற்கொள்வர் என எதிர்பார்க்கின்றனர்.கடந்தாண்டு வெள்ளியங்கிரி மலையேற்றம் மேற்கொண்டவர்களில்,9 பேர் உயிரிழந்தனர்.
இந்தாண்டு உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க முதலுதவி சிகிச்சை மையம் அமைத்து, மருத்துவ உபகரணங்கள் மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், உடல் நலன்பாதிக்கப்படும் பக்தர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, இரண்டு ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளது.
மலையேற்றம் மேற்கொள்பவர்களுக்கு மூச்சு திணறல், இருதய பாதிப்பு, உயர் அல்லது குறைந்த ரத்த அழுத்தம், ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, வலிப்பு உள்ளிட்ட உடல்நலக்குறைவு உள்ளவர்கள் மலையேற வேண்டாம் என வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
பிளாஸ்டிக் பொருட்கள் மலைப்பகுதிகளில் வீசுவதை தவிர்க்க, பக்தர்களின் உடமைகளை வனத்துறையினர் சோதனையிடுகின்றனர். மலைப்பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட கடை அமைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது மற்றும் ஆறாவது மலைகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்து சமய அறநிலையம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் ‘அத்து மீறி வனப்பகுதிகளுக்குள் செல்லக்கூடாது. வெயில் காரணமாக மலைப்பகுதி காய்ந்து இருப்பதால் எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்து செல்லக்கூடாது’ என்றனர்.