திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் வரலாறு காணாத கன மழை பெய்தது. இதில் கேரளாவில் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மிதந்தன. இலட்சக்கணக்கான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ள பாதிப்பில் இருந்து தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள கேரளாவில், நேற்று மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் ஆய்வு மேற்கொண்டார். வெள்ளத்தில் வீடுகளை முழுமையாக இழந்தவர்களுக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
வீடுகளை மறு கட்டுமானம் செய்வதற்கு நிவாரண தொகை கோருபவர், மாவட்ட ஆட்சியரிடம் சிறப்பு விண்ணப்பம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 75 சதவீதத்திற்கும் மேலாக வீடுகள் சேதம் அடைந்தவர்களும் இந்த நிவாரணம் வழங்கப்படும் என்றும் ஆனால், சொந்தமாக நிலம் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள அதிகாரிகள் கணக்கெடுப்பின் படி, 16,661 வீடுகள் முழுமையாகவும் 2 .21 லட்சம் வீடுகள் ஓரளவு சேதமும் அடைந்து இருப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.