‘பால் அல்லாமல் வேறு பொருட்களில் தயாரிக்கப்பட்ட உணவு பதார்த்தங்களை, ‘பால் சார்ந்த உணவுப் பொருட்கள்’ என ‘ஸ்டிக்கர்’ ஒட்டி சந்தையில் விற்கக்கூடாது’ என, உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
பாலில் இருந்து தயாரிக்கப்படும் பால்கோவா, ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் சந்தையில் விற்கப்படுகின்றன. குழந்தைகளின் விருப்ப உணவாகவும் அவை உள்ளன.
அதில் சில பொருட்கள், பால் அல்லாமல், தாவரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய், தேங்காய் பால், சோயா பால் போன்றவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன.
அவ்வாறு தயாரிக்கப்படும் இனிப்புகள், பிஸ்கட் உள்ளிட்ட பிற உணவு பொருட்கள், பாலில் இருந்து தயாரிக்கப்பட்டதாகவும், பாலில் உள்ள சத்துகள் அதில் உள்ளதாகவும் விளம்பரப்படுத்தப்படுகிறது.
இந்த உணவுப் பொருட்களும், பால் வாயிலாக தயாரிக்கப்பட்ட பொருட்களை போன்ற சுவை, நிறங்களை கொண்டுள்ளன. இதனால், இவையும் பால் சார்ந்த பொருட்கள் தான் என, பொதுமக்கள் நம்புகின்றனர்.
உணவு பாதுகாப்பு விதிப்படி, பால் அல்லாத பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் எந்தவொரு உணவுப் பொருளும், ‘பால் சார்ந்த உணவு பொருள்’ வகைக்குள் வராது; ‘பால் சார்ந்த உணவுப் பொருள்’ என, அவற்றை சந்தைப்படுத்தக் கூடாது என தெளிவுப்படுத்தியுள்ள, உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு ஆணையம், பால் சார்ந்த அனைத்து உணவுப்பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிட்டுள்ளது