பொள்ளாச்சி பகுதியில் இருந்து வெளி மாநிலங்களுக்கு 3 லட்சம் இளநீர் ஏற்றுமதி ஆனது என்று சங்க ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தெரிவித்தார்.
தென்னை விவசாயம்
ஆனைமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தாலுகாவை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 23,000 ஹெக்டர் தென்னை விவசாயம் செய்யப்படுகின்றன. மேலும் இந்தியாவில் தென்னை விவசாயத்தில் செழித்து விளங்கும் முதல் நகராக பொள்ளாச்சி உள்ளது. பொள்ளாச்சியில் இருந்து தமிழகத்தின் சென்னை, மதுரை, திண்டுக்கல் உட்பட பிற மாவட்டங்களுக்கும், டெல்லி அரியானா, மராட்டியம், உத்தரபிரதேசம், ஆந்திரா, கர்நாடகா உட்பட பிற மாநிலங்களுக்கும் கனரக வாகனங்களில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிலும் பச்சை நிற இளநீருக்கும் சிவப்பு நிற இளநீருக்கும் வெளி மாநிலங்களில் வரவேற்பு அதிக அளவு இருந்து வருகிறது. வெயில் மற்றும் மழைக்காலங்களில் கூட பொள்ளாச்சியில் இருந்து அதிக அளவு வெளி மாநிலங்களுக்கு இளநீர் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 2½ லட்சம் இளநீர் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது.
விளைச்சல் அதிகரிப்பு
கடந்த 20 நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தென்னை மரங்களில் இளநீர் அதிக அளவில் விளைகிறது. இதனால் தற்போது 3 லட்சம் இளநீர் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இளநீர் ஒன்றின் விலை 21 ரூபாய் முதல் 31 ரூபாய் வரை விற்பனை ஆனது. தற்போது உள்ளூர்களில் மழைக்காலம் என்பதால் இளநீருக்கான தேவை குறைந்து காணப்பட்டாலும் வெளிமாநிலங்களில் வெயில் வாட்டி வதைப்பதால் இளநீர் தேவை அதிகரித்து வருகிறது. 3 லட்சம் இளநீர்
3 லட்சம் இளநீர்
இதுகுறித்து இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:- ஆனைமலை தாலுகாைவ சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களுக்கு 3 லட்சம் இளநீர் கனரக வாகனங்களின் உதவி கொண்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காலகட்டத்தில் தடுப்பு நடவடிக்கை இருந்ததால் பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் முடியாமல் இளநீர் விலை தொடர்ந்து சரிந்தது. தற்போதைய சூழ்நிலையில் வெளி மாநிலங்களில் வெயில் வாட்டி வதைப்பதால் 5 லட்சம் இளநீர் தேவை இருந்தும் பொள்ளாச்சி பகுதியில் இருந்து மட்டும் 3 லட்சம் இளநீர் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.