வெளிநாடுகளில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி, தாய்-மகன் உள்பட 3 பேர் கைது

0
81

கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் வினுமோன்(வயது 33). இவரை கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் கோவை வடவள்ளியில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்த பெங்களூரு கொட்டிக்கராவை சேர்ந்த வானதி சுரேந்தர்(54), அவரது மகன் ரஜீவ்(34) மற்றும் நாமக்கல் குருசம்பாளையத்தை சேர்ந்த தங்கராஜ்(50) ஆகியோர் அணுகினார்கள்.

அப்போது அவர்கள் தங்கள் நிறுவனம் சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்து நாடுகளில் என்ஜினீயர், பேராசிரியர் மற்றும் கட்டுமான துறையில் வேலைவாங்கி தருவதாக வினுமோனிடம் கூறினார்கள். இதை நம்பிய வினுமோன் தனக்கு சிங்கப்பூரில் பேராசிரியர் பணி வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், ஆண்டுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் என்றும் 3 பேரும் கூறினார்கள். இதைத் தொடர்ந்து வினுமோன் கோவை வடவள்ளி வந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கொடுத்தார்.
அவர்கள் 3 பேரும் பணத்தை வாங்கிக் கொண்டு வினுமோனுக்கு பல மாதங்கள் ஆகியும் வெளிநாட்டில் வேலை வாங்கி தரவில்லை. இது தொடர்பாக வினுமோன் 3 பேரிடமும் வேலைவாங்கி தாருங்கள் அல்லது பணத்தை திருப்பி கொடுங்கள் என்று பலமுறை கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் வேலைவாங்கி தரவில்லை.
இதைத் தொடர்ந்து வினுமோகன் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
புகாரை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். இதில் வானதி சுரேந்தர், அவரது மகன் ரஜீவ் மற்றும் தங்கராஜ் ஆகியோர் வாட்ஸ் அப் குரூப் அமைத்து அதன் மூலம் சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்து நாடுகளில் வேலைவாங்கி தருவதாக கூறி 25 பேரிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 3 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 420(மோசடி), 406(நம்பிக்கை மோசடி) உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் வானதி சுரேந்தரனும், ரஜீவ்வும் பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர். மேலும் சேலத்தில் பதுங்கியிருந்த தங்கராஜையும் போலீசார் கைது செய்தனர். வெளிநாடுகளில் வேலைவாங்கி தருவதாக கூறி தாய்-மகன் உள்பட 3 பேரிடமும் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.