மேட்டுப்பாளையம் ; பிப்ரவரி மாதத்திலேயே வெயில் பட்டயை கிளப் புது…. மே, ஜூன் வரை எப்படி சமாளிப்பது என இப்பவே மக்கள் புலம்ப துவங்கிவிட்டனர். கோடை வெப்ப பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என டாக்டர்கள் அறிவுறுத் துகின்றனர்.
வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், டிஹைட்ரேஷன், சிறுநீர் தொற்று, ஹீட் ஸ்ட்ரோக் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இவற்றை தவிர்க்க என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என டாக்டர்கள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, காரமடை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் போரப்பன் கூறியதாவது:-
கோடைக்காலம் என்றில்லை, அதிக வெப்பம் நிலவும் காலங்களில் டிஹைட்ரேஷன், சிறுநீர் தொற்று, அம்மை நோய், செரிமானப் பிரச்னை போன்ற வயிற்றுக் கோளாறுகள், தொண்டை அழற்சி, சரும நோய்கள் என பல்வேறு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
வயதானவர்களுக்கு வெயிலால் உடல் பலவீனமாகி ‘ஹீட் ஸ்ட்ரோக்’ என்னும் வெப்பத்தாக்கு நோய் வரலாம். அதே போல் நடுத்தர வயதினருக்கு சிறுநீரகப் பிரச்னைகளும், குழந்தைகளுக்குத் தொண்டையில் பாதிப்புகளும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
வெப்பம் அதிகமுள்ள காலங்களில் வியர்வை மற்றும் அளவுக்கதிகமாக சிறுநீர் வெளியேறுவதால் உடலில் நீர் வறட்சி ஏற்படும். அதைத் தவிர்க்க இளநீர், மோர், நன்னாரி சர்பத் போன்ற ஆரோக்கியமான இயற்கை பானங்களை அருந்தவேண்டும். தர்பூசணி, வெள்ளரி போன்ற பழங்களைச் சாப்பிடலாம். வெயிலால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அல்சர் பிரச்னைகள் வரும்.
இவற்றை சரிசெய்ய நார்ச்சத்து அதிகமுள்ள முழுதானிய உணவுகள், காய்கறிகள், பருப்பு வகைகள், நீர்ச் சத்து நிறைந்த பழவகைகளை அதிகம் சாப்பிடவேண்டும்.
காலை, இரவு என இரண்டு வேளையும் கட்டாயம் குளிக்கவேண்டும். பகலில் வெளியே செல்லும்போது முகம் மற்றும் கைகளை துணிகளால் மூடியபடி செல்வது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.
தோலபாளையம், ஆயுர்வேதா அரசு மருத்துவ உதவி அலுவலர் மருத்துவர் மேகலை கூறியதாவது:
வெயில் அதிகரித்துள்ள நிலையில், வேர்வை அதிகம் சுரப்பதினால் சளி தொந்தரவு ஏற்படும். வேர்வை வந்தவுடன் அதனை உடனே துடைக்க வேண்டும். உடனே ஏசியில் போய் அமரக்கூடாது.
இக்காலக்கட்டத்தில் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடக்கூடாது, கூல்டிரிங்ஸ் குடிக்க கூடாது. கம்பங் கூல், மோர், ராகி கூல் குடிக்கலாம். மைதா உணவுகள், அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. தீவிர உடற்பயிற்சி கண்டிப்பாக கூடாது. சிறுநீர் வந்தவுடன் உடனே கழிக்க செல்ல வேண்டும். அடக்கி வைதால் தொற்று ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.