கோவை; கோவை, ராமநாதபுரம் கருணாநிதி நகர் சுற்றுவட்டார பகுதிகளில், குண்டும் குழியுமாக இருந்த இடங்களில், தமிழக துணை முதல்வர் உதயநிதி வருகையை தொடர்ந்து, மாநகராட்சி சார்பில் அவசர அவசரமாக, நேற்று தார் ரோடு போடப்பட்டது
தி.மு.க., முன்னாள் எம்.பி., இரா.மோகன் மறைவுக்கு அஞ்சலி செலுத்த, தமிழக துணை முதல்வர் உதயநிதி, நேற்று கோவை வந்தார். மோகன் வீடு, ராமநாதபுரம் கருணாநிதி நகரில் உள்ளது. அவ்வீதியை சுற்றியுள்ள அனைத்து பகுதியிலும் ரோடு குண்டும் குழியுமாக இருந்தது.
துணை முதல்வர் வருகை உறுதியானதும், மாநகராட்சியால் அவசர அவசரமாக லாரி லாரியாக, ‘வெட்மிக்ஸ்’ கொட்டி, சமன் செய்யப்பட்டது. உதயநிதி கார் சென்ற வழித்தடத்தில் மட்டும் உடனடியாக தார் ரோடு போடப்பட்டு, பிளீச்சிங் பவுடர் துாவப்பட்டது.
கருணாநிதி நகரில் சாலை வசதி மோசமாக இருப்பதாகவும், செப்பனிட வேண்டும் எனவும், பலமுறை இப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.