மேட்டுப்பாளையம்; காரமடை அருகே குட்டையூர் பகுதியை சேர்ந்தவர் சுமதி, 56. இவரது கணவர் 12 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சுமதியின் இளைய மகள் வைஷ்ணவி, அவரது கணவர் கோகுல் பிரசாத் உடன் கோவை விளாங்குறிச்சியில் வசித்து வருகிறார். இதனிடையே கோகுல் பிரசாத் தனது தங்கையின் நிச்சயதார்த்தத்திற்காக தங்க நகைகளை பத்திரமாக வைக்க வேண்டும் என கருதி, சுமதியின் வீட்டில் வைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 8ம் தேதி சுமதி, விளாங்குறிச்சியில் உள்ள தனது இளைய மகள் வைஷ்ணவி வீட்டிற்கு சென்றார். சுமதியின் கணவர் கோகுல் பிரசாத் கடந்த 14ம் தேதி மதியம், தங்க நகைகளை எடுப்பதற்காக சுமதி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பூட்டிய வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 9 3/4 (ஒன்பதே முக்கால்) பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது.
இதையடுத்து சுமதி நேற்று முன் தினம் காரமடை போலீஸ் ஸ்டேஷன் வந்து புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து, போலீசார் கூறுகையில், வீட்டில் கொள்ளையடித்தவர்கள் கேரளாவில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தனிப்படையினர் அங்கு விரைந்துள்ளனர், என்றனர்.——-