வால்பாறை அருகே நடுமலை எஸ்டேட் வடக்கு பிரிவை சேர்ந்தவர் பாக்கியம். தேயிலை தோட்ட தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை தனது வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போது அந்த அறையின் அருகில் பூனை ஒன்று அமர்ந்திருந்தது. இதை அருகில் உள்ள தேயிலை தோட்டம் வழியாக வந்த சிறுத்தைப்புலி பார்த்தது. தொடர்ந்து பூனை மீது பாய்ந்து பிடிக்க முயற்சித்தது. உடனே பூனை, சமையல் அறையின் மேற்கூரை மீது தாவி தப்பித்தது. அதை துரத்தி வந்த சிறுத்தைப்புலி சமையல் அறைக்குள் அங்குமிங்கும் ஓடியது. இதை கண்ட பாக்கியம் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். உடனே சிறுத்தைப்புலி அந்த அறையைவிட்டு வெளியே ஓடியது. வீட்டுக்குள் சிறுத்தைப்புலி வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.