சூலூர், மார்ச் 19: சூலூர் அருகே நடுப்பாளையத்தில் வசிப்பவர் புவனேஸ்வரி. இவரது வீட்டின் பூட்டை உடைத்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக மர்ம நபர் பீரோவில் இருந்த 5 பவுன் நகையை திருடி சென்றார். இது தொடர்பாக புவனேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் சூலூர் பெரியகுளம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது சந்தேகத்திற்கிடமான வகையில் அவ்வழியாக வந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் வெல்லமடை காளிபாளையம் பகுதியில் சேர்ந்த பால்காரன் என்ற செந்தில் (54) என தெரியவந்தது. இவர் மீது கோவையில் 18க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பதும், பல பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருடியதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்த போலீசார், செந்திலை கைது செய்து அவரிடம் இருந்து 5 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.