மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோடு பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன். விவசாயி. இவர் கடந்த 14-ந் தேதி காலை தனது வாழை தோட்டத்திற்கு செல்லும் வழியில் மைதானம் மாரியம்மன் கோவில் அருகே தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சக்திவேல், தியாகு ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் ஜாகிர் உசேனிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். ஆனால்அவர் தர மறுத்ததால் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்துள்ளனர். பின்னர் சக்திவேல் ஜாகீர்உசேனின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொள்ள,தியாகு வாழை இலை வெட்டி எடுத்து வர வைத்திருந்த அரிவாளால் ஜாகீர் உசேனின் தலை, கை மற்றும் வலது கால் ஆகிய இடங்களில் வெட்டி ரத்த காயம் ஏற்படுத்தியதாக தெரிகிறது.
இது குறித்து ஜாகீர் உசேன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். இது குறித்த வழக்கு மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று வழக்கை விசாரித்த சார்பு நீதிமன்ற நீதிபதி சிவகுமார், தியாகு என்பவருக்கு 4 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம், சக்திவேல் என்பவருக்கு 3 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கு விசாரணையில் அரசு தரப்பில் வக்கீல் சிவசுரேஷ் ஆஜரானார்.