கோவை; கோவை மாவட்ட விவசாயிகள், மண்ணில் குறைவாக உப்புத் தன்மையை ஏற்படுத்தும் சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்தலாம் என, வேளாண் துறை தெரிவித்துள்ளது.
‘சுண்ணாம்புத் தன்மை உள்ள மண்ணில், சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் உரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என, வேளாண் ஆராய்ச்சி மையங்கள் கூறுகின்றன.
எனவே, சுண்ணாம்பு சத்துள்ள மண்ணுக்கு டி.ஏ.பி., உரத்தைப் பரிந்துரை செய்ய, வேளாண் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்’ என,விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கு வேளாண் துறை விளக்கமளித்துள்ளது.
கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை மாவட்டத்தில், இந்த சாகுபடிக்குத் தேவையான உரங்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
பன்னாட்டு சந்தையில் டி.ஏ.பி., விலை அதிகமாக உள்ளால் டி.ஏ.பி., உரத்துக்கு மாற்றாக கால்சியம், பாஸ்பரஸ், சல்பர் போன்ற கூடுதல் சத்துகள் அடங்கியுள்ள சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை (அம்மோனியம் பாஸ்பேட் சல்பேட் 20:20:0:1, என்.பி.கே., 15:15:15, என்.பி.கே., 16:16:16) பயன்படுத்தலாம்.
எண்ணெய் வித்துப் பயிர்களில், டி.ஏ.பி., உரத்துக்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரத்தைப் பயன்படுத்தும்போது, மகசூல் அதிகரித்து, எண்ணெய் அளவும் அதிகரிக்கிறது.
டி.ஏ.பி., உரமானது மண்ணில் உப்பு நிலையை ஏற்படுத்துவதாக, ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம், சூப்பர்பாஸ்பேட் உரம் டி.ஏ.பி., உரத்தை விட குறைவாகவே உப்புத் தன்மையை ஏற்படுத்துகிறது.
எனவே, டி.ஏ.பி., 50 கிலோ ரூ.1,350. சூப்பர் பாஸ்பேட்ரூ. 610. அம்மோனியம் பாஸ்பேட் ரூ.1220. எனவே, டி.ஏ.பி.க்கு மாற்றாக, சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை விவசாயிகள் பயன்படுத்தலாம்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.