விவசாயிகளுக்கு தனி குறியீட்டு எண் பதிவு

0
50

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள கிராமங்களில், வேளாண் அதிகாரிகள் முகாமிட்டு, விவசாயிகளுக்கு தனி குறியீட்டு எண் பதிவு செய்து வருகின்றனர்.

மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டங்களை, ஒற்றைச் சாளர முறையில் பெறுவதற்காக, வேளாண் அடுக்குத் திட்டத்தின் கீழ், விவசாயிகளின் அனைத்து தகவல்களையும், டிஜிட்டல் தரவுகளாக பதிவு செய்யும், விவசாயிகள் பதிவேடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக, ஒவ்வொரு வருவாய் கிராமங்களிலும், சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள, 20 வருவாய் கிராமங்களில், ‘விவசாயிகள் பதிவேடு’ திட்ட முகாம் நடந்து வருகிறது.

இதில், விவசாயிகளின் ஆதார் எண், புகைப்படம், நில உரிமை ஆவணங்கள், மொபைல் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், சேகரித்து இணையதளத்தில் பதிவு செய்து, ஒவ்வொரு விவசாயிகளுக்கும், தனி அடையாள எண் வழங்கப்பட்டது.

கடந்த மூன்று நாட்களாக, சர்வர் பிரச்னையால், பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. நேற்று முதல் சர்வர் கோளாறு சீரானது. இதனையடுத்து, விவசாயிகளின் தகவல்கள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இருப்பினும், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் பெரும்பாலான விவசாயிகள், பழனிக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளதால், சனிக்கிழமையே வீடு திரும்புவார்கள். அதன்பின்பே, அதிக விவசாயிகளின் தகவல்களை, பதிவேற்றம் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.