விவசாயிகளின் தகவல்களை சேகரிக்க ‘விவசாயிகள் பதிவேடு’ சிறப்பு முகாம்

0
52

கோவை; மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களை எளிதில் பெறும் வகையில், வேளாண் அடுக்குத் திட்டத்தின் கீழ், விவசாயிகளின் அனைத்துத் தகவல்களையும் டிஜிட்டல் தரவுகளாக பதிவு செய்ய, விவசாயிகள் பதிவேடு (பார்மர் ரிஜிஸ்டர்) திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக, வருவாய் கிராமம் தோறும் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.

விவசாயிகளின் நில உடைமை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் டிஜிட்டல் முறையில் பதிவு செய்து, ஆதார் போன்று, விவசாயிகளுக்காக பிரத்யேக அடையாள எண்ணை உருவாக்கும் திட்டத்தை, மத்திய அரசு அறிவித்துள்ளது.

‘விவசாயிகள் பதிவேடு’ அல்லது அக்ரி-ஸ்டாக் எனப்படும் இத்திட்டத்தில் பதிவு செய்வதன் வாயிலாக, விவசாயிகள் பல்வேறு அரசுத் துறைகளின் நலத்திட்டங்களை எளிதில் பெற முடியும். ஒவ்வொரு முறையும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.

உரிய பயனாளிகளுக்கு திட்டங்கள் சென்றடைவதையும் உறுதி செய்ய முடியும். விவசாயிகள் நேரடியாக வலைத்தளத்தில் பதிவு செய்தால், முன்னுரிமை அடிப்படையில் அரசின்நலத்திட்டங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

மத்திய அரசின் விவசாயிகள் பதிவேட்டில் பதிவதற்கான சிறப்பு முகாம், முதல்கட்டமாக வரும் 20ம் தேதி வரை நடக்கவுள்ளது.

இதுதொடர்பாக, கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி வெளியிட்டுள்ள அறிக்கை:

கோவை மாவட்டத்தில் 54,500 விவசாயிகள், பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயனடைந்து வருகின்றனர். விவசாயிகள் பதிவு (பார்மர் ரிஜிஸ்டர்) திட்டத்தின் வாயிலாக, தரவுகளைச் சரிபார்த்து அவர்களுக்கு அடையாள எண் வழங்கப்பட உள்ளது. இப்பணியை மேற்கொள்ள, வருவாய் கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.

ஒவ்வொரு வருவாய் கிராமத்துக்கும் வேளாண் துறை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள், அட்மா திட்ட பணியாளர்கள் வருகை தந்து, தனிப்பட்ட அடையாள எண் வழங்கும் பணியை மேற்கொள்கின்றனர்.

விவசாயிகள் இம்முகாம்களுக்கு, சிட்டா, ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட செல்போன் ஆகியவற்றைக் கொண்டு வந்து, அடையாள எண் பதிவு செய்ய விவரங்களை வழங்க வேண்டும்.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.