பெ.நா.பாளையம் : இரையை விழுங்கிய மலைப்பாம்பு அது இருக்கும் பகுதியில், மனிதர்கள் நடமாட்டம் இருப்பது தெரியவந்தால், உயிர் தப்ப, விழுங்கிய இரையை கக்கிவிட்டு தப்ப முயற்சி செய்யும் என, வனத்துறையினர் தெரிவித்தன
கோவை மாவட்டம் வடக்கு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு, பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் செல்லும் வழியில் வனப்பகுதி அருகே ராமசாமி தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று நெளிந்து கொண்டு இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு துறை தலைமை அலுவலர் ஜெகதீஷ் சந்திர போஸ், சுரேஷ்குமார் மற்றும் ஊழியர்கள் வெற்றிவேல், வேல்முருகன், மோகன், முகமது அலி ஜுபேர், நாராயணன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தினர். இதில், மலைப்பாம்பு, புள்ளிமான் ஒன்றை விழுங்கி இருந்தது தெரியவந்தது.
ஆட்கள் நடமாட்டம் இருப்பது தெரியவந்ததால், மலைபாம்பு, தான் விழுங்கிய மானின் உடலை கக்கியது. சம்பவ இடத்துக்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினரிடம், தீயணைப்பு துறையினர் மலைப்பாம்பு மற்றும் இறந்த மானின் உடலை ஒப்படைத்தனர்.
இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் கூறுகையில்,’ பொதுவாக இரை விழுங்கிய மலைப்பாம்பு, அது செரிக்க ஒரு வாரம் முதல், 10 நாட்கள் வரை ஒரே இடத்தில் இருக்கும். அதனால் நகர முடியாது. அந்த இடத்தில் ஆட்கள் நடமாட்டம் இருப்பது தெரிந்தால், உயிர் தப்ப, தான் விழுங்கிய இரையை அவசரம் அவசரமாக கக்கிவிட்டு அவ்விடத்திலிருந்து சென்றுவிடும்.
அதுபோல மனிதர்கள் நடமாட்டம் இருந்ததால் மானை மலைப்பாம்பு கக்கி விட்டது. அந்த மலைப்பாம்பை அடர்ந்த காட்டுப்பகுதியில் விடுவித்தோம். மேலும், மலைப்பாம்பு கக்கிய இறந்த மானின் உடலை மலைப்பாம்பு அருகே கிடத்திவிட்டு வந்துவிட்டோம்.
ஆட்கள் நடமாட்டம் இல்லை என்பது தெரிந்தவுடன், தான் கக்கிய இரையை மலைப்பாம்பு மீண்டும் விழுங்கி விடும்’ என்றனர்.