ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, வட்டார வள மையம், ஆனைமலை மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நாளை மறுநாள்(புதன்கிழமை) காலை 9:30 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆனைமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியானது ஆனைமலை பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கி போலீஸ் நிலைய வீதி, மாரியம்மன் கோவில் வீதி, சந்தப்பேட்டை வழியாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வரை நடைபெற்றது. பேரணியை ஆனைமலை வட்டார கல்வி அலுவலர் சின்னப்ப ராஜ் தொடங்கி வைத்தார். அப்போது முகாம் குறித்து துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. இதில் ஆசிரியர் பயிற்றுனர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.