சாலையோர வியாபாரிகள்
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது சாலையோர வியாபாரிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் மற்றும் பாலக்காடு ரோடு ஆகிய பகுதிகளில் சுமார் 40 ஆண்டுகாலமாக சாலையோரத்தில் பூக்கடை, பழக்கடை, செருப்பு கடை, துரித உணவகங்கள், சூப் கடை மற்றும் மாலை நேர சிறு உணவகங்கள் நடத்தி வருகிறோம். இந்த கடைகளை நம்பி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சுமார் 60 குடும்பங்களின் வாழ்வாதாரம் உள்ளது. கடைகளை போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் எந்த இடையூறும் இல்லாமல் நடத்தி வருகிறோம். மேலும் அனைவருக்கும் நகராட்சி நிர்வாகம் மூலம் அடையாள அட்டை வழங்கி, சிறு தொழில் தொடங்க கடனுதவியும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தற்போது சாலை விரிவாக்க பணிகள் முடிந்து உள்ள நிலையில் கடைகளை நடத்த கூடாது என்கின்றனர். அதிகாரிகளின் இந்த அறிவிப்பு எங்களின் வாழ்வாதாரத்தை கேள்விகுறி ஆக்குவதோடு வாங்கிய கடனை செலுத்தவும், குடும்பம் நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். எனவே சாலையோர கடைகளை தொடர்ந்து நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
விளையாட்டு மைதானம்
தடகள சங்கத்தினர் கூறியதாவது:-
கடந்த ஆட்சியில் ஸ்கேட்டிங் மைதானம் அமைத்து யாருக்கும் பயன் இல்லாமல் திறந்தவெளி பாராக செயல்பட்டு கொண்டிருக்கிறது. சமத்தூர் ராம ஐய்யங்கார் பள்ளி மைதானத்தில் ஸ்கேட்டிங் மைதானம் அமைத்தால், அந்த மைதானமும் பாழாகி யாருக்கும் பயனில்லாமல் உள்ளது. அந்த மைதானத்தை கால்பந்து மைதானமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் உடற்பயிற்சி எடுக்கவும், விளையாட்டு பயிற்சி பெற ஒரு மைதானம் அமைக்க வேண்டும். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தை பராமரித்து மேம்படுத்த வேண்டும். சர்க்கஸ் மைதானத்தை ஒரு சிறந்த கிரிக்கெட் மைதானமாக்கி தர வேண்டும். கால்பந்து வீரர்கள் பயன்பெறும் வகையில் ஒரு மைதானம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ரேஷன் பொருட்கள்
பொள்ளாச்சி அருகே உள்ள செல்லப்பிள்ளைகரடு பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்கு சென்றால் கைரேகை பதிவு இல்லை என்று ஊழியர்கள் கூறுகின்றனர். இந்த பகுதியில் இணையதள சர்வர் பிரச்சினை உள்ளது. இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க முடியவில்லை. மாதம் ஒரு முறை வழங்கப்படும் அரிசியும் சரியாக கிடைப்பதில்லை. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.