விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் எச்சரிக்கை : 3 ஆண்டு வரை தகுதி நீக்கம்! வெற்றி பெற தில்லு முல்லு;

0
30

கோவை : போட்டிகளில் முறைகேடான வழியில் வெற்றிபெற்றது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது மூன்று ஆண்டுகள் வரை தகுதி நீக்க நடவடிக்கை பாயும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறை சார்பில் பாரதியார் தின விளையாட்டு போட்டிகள், குறுமைய அளவிலான, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் என பல்வேறு போட்டிகள், 12, 14, 17, 19 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில், மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தவும், அவர்களை ஊக்குவிக்கவும் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ‘முதல்வர் கோப்பை’ விளையாட்டு போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. கோவையில் கடந்த செப்., மாதம் நடந்த போட்டிகளில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உட்பட, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பல்கலைகளிலும் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், வீரர், வீராங்கனைகளின் பிறந்த தேதி உள்ளிட்டவற்றில் முறைகேடு செய்து வெற்றிபெற வைத்து, கல்வி நிறுவனங்கள் சில தங்களை பிரபலப்படுத்துவதாக தமிழகத்தில் பரவலாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

முறைகேடு நடப்பதாக நடுவர்கள், எதிரணியினரிடம் விளையாட்டு வீரர்கள் வாக்குவாதம், போராட்டங்களில் ஈடுபடுவதும் உண்டு. இச்சூழலில் உரிய ஆதாரங்களுடன் முறைகேடு குறித்து எழுத்துப்பூர்வமான புகாரை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளரிடம் அளித்தால் உடனடி முடிவு எடுக்கும் அதிகாரமும் அவருக்கு உள்ளது.

அவ்வாறு முறைகேடான வழியில் வெற்றிபெற்றது தெரியவந்தால் அப்போட்டியில் இருந்து சம்பந்தப்பட்ட பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் நீக்கப்படும். மேலும், மூன்று ஆண்டுகள் வரை விளையாட முடியாது தகுதி நீக்கம் செய்வதுடன், துறை சார்ந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் எச்சரித்துள்ளது.

துணைநிற்க மாட்டோம்!

விளையாட்டு சங்கத்தினர் கூறுகையில்,’இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம்(எஸ்.ஜி.எப்.ஐ.,) சார்பில் நடக்கும் போட்டிகள், தேசிய அளவிலான உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஊக்கமருந்து பரிசோதனை வழக்கமாக செய்யப்படும். தங்கள் செயல்திறனை அதிகரிக்க வீரர்கள் சிலர் ஊக்க மருந்து சாப்பிட்டு விதிமீறுவதுண்டு. கோவையில் இதற்கு வாய்ப்புகள் குறைவு. அதேசயம், தவறு செய்யும் வீரர்களுக்கு நாங்கள் எப்போதும் துணை நிற்கமாட்டோம்’ என்றனர்.

ஆதாரம் அவசியம்!

போட்டியில் முறைகேடு செய்தது தெரியவந்தால் மூன்றாண்டு வரை தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பிறந்த தேதி மாற்றி முறைகேடான வழியில் வீரர்கள் விளையாடுவதற்கு வாய்ப்புகள் குறைவுதான். அதேசமயம், ஏதேனும் புகார் இருப்பின் எழுத்துப்பூர்வமாக அளித்து, ஆதாரத்துடன் நிரூபித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

– ஆனந்த்,

மாவட்ட விளையாட்டு அலுவலர், கோவை