கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் நொய்யல் ஆறு உற்பத்தியாகி, மத்வராயபுரம், ஆலாந்துறை, தொண் டாமுத்தூர், பேரூர், கோவை, திருப்பூர் வழியாக சென்று காவிரியில் கலக்கிறது. இதனால் நொய்யல் ஆற்றின் கரையோர பகுதிகளில் பாக்கு மரங்கள் அதிகமாக உள்ளன.
குறிப்பாக கோவை நரசீபுரம், செம்மேடு, கீழ் சித்திரைச் சாவடி, மேல் சித்திரைச்சாவடி, தொண்டாமுத்தூர், பேரூர், தெலுங்குபாளையம், வீரகேரளம், நாகராஜபுரம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பாக்கு மரங்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன.
இதில் நாட்டுப்பாக்கு, மங்கலா மற்றும் முகித் பாக்கு என்று 3 வகை உள்ளன. நாட்டுப்பாக்கு மற்றும் முகித் பாக்கு ஆகியவை தான் இந்த பகுதிகளில் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு உள்ளன.
இதனால் அந்த பகுதியில் எங்கு பார்த்தாலும் பாக்கு மரங்கள் ஓங்கி வளர்ந்துள்ளதை பார்க்க முடியும். ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 4 மாதங்கள் பாக்கு மரங்களில் இருந்து பாக்கு அறுவடை செய்யலாம்.
ஆனால் அவற்றை விற்பனை செய்ய சந்தை வசதி இல்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பாக்குகளை விற்பனை செய்ய வசதியாக தொண்டாமுத்தூரில் சந்தை அமைக்கப்படுமா என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
இது குறித்து பாக்கு சாகுபடி செய்யும் விவசாயிகள் கூறியதாவது:-
ஒரு ஏக்கரில் 650 முதல் 800 பாக்கு மரங்கள் வைக்க முடியும். 5 வருடங்கள் கழித்துதான் பலன் கிடைக்க தொடங்கும். அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 4 மாதங்களுக்கு 40 நாட்களுக்கு ஒருமுறை பாக்குகளை அறுவடை செய்யலாம்.
இதற்காக ஒரு ஏக்கருக்கு உரம் வைப்பது, களை எடுப்பது உள்பட பல்வேறு வகையில் ஆண்டுக்கு ரூ.70 ஆயிரம் வரை செலவு ஆகும். ஒரு ஏக்கருக்கு 8 டன் முதல் 10 டன் வரை மகசூல் கிடைக்கும். தற்போது பாக்கு அறுவடை தொடங்கி உள்ளது.
காய்கள் குறைவாக உள்ளதால் மரங்களில் காய்கள் இருப்பதை தேடி அறுவடை செய்யும் நிலை இருக்கிறது. ஆனால் அடுத்த அறுவடையில் அதிக பாக்குகள் கிடைக்கும். தற்போது ஒரு கிலோ பாக்கு ரூ.38-ல் இருந்து ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பாக்குகளை விற்பனை செய்ய சந்தை இல்லை. இதனால் வியாபாரிகள் நேரடியாக தோட்டத்துக்கு வந்து பாக்குகளை வாங்கி செல்கிறார்கள்.
ஆனால் இங்கு சந்தை இருந்தால் ஏராளமான வியாபாரிகள் வருவார்கள். பாக்குகளையும் எளிதாக விற்பனை செய்ய முடியும். இதனால் விவசாயிகளுக்கு கூடுதலாக விலை கிடைக்கும். போதிய விலை கிடைக்காததால் பாக்கு விவசாயிகள் வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்கள். சில விவசாயிகள் மரங்களிலேயே பாக்குகள் பழுத்த பின்னர் அவற்றை அறுவடை செய்கிறார்கள். இந்த வகை பாக்குகளுக்குதான் விலை அதிகம். ஆனால் அவற்றை சந்தைப்படுத்தும் வசதி இல்லை. உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாக்கு விவசாயிகளின் வாழ்க்கை மேம்பட தொண்டாமுத்தூர் பகுதியில் பாக்கு சந்தை அமைத்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.