விமானம் கோவையில் அவசரமாக தரையிறக்கம்

0
90

பெங்களூரு-மாலத்தீவு விமானம் கோவையில் அவசரமாக தரையிறக்கம்

புகை எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் பெங்களூரூ-மாலத்தீவு விமானம் கோவையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மதிய உணவு வழங் காததால் அதிகாரிகளு டன் பயணிகள் வாக்கு வாதம் செய்தனர்.

எச்சரிக்கை அலாரம் ஒலித்தது

கர்நாடகா மாநிலம் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து மாலத்தீவு நாட்டின் தலைநகர் மாலிக்கு பகல் 11.45 மணிக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. அதில், 92 பயணிகள் இருந்தனர்.

இந்த விமானம் பெங்களூருவில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் இருந்த புகை எச்சரிக்கை அலாரம் ஒலிக்க தொடங்கியது. இதனால் பயணிகள் மற்றும் விமானிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே விமானி, கோவை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கோவை விமான நிலைய அதிகாரிகள் அந்த விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி அளித்தனர்.

இதைத்தொடர்ந்து விமான நிலையத்தில் தீயணைப்பு வாகனம் உள்பட அவசரகால ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டது.

பயணிகள் மகிழ்ச்சி

இதைத்தொடர்ந்து மதியம் 12.57 மணிக்கு அந்த விமானம் கோவை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் பத்திரமாக தரையிறங்கியது.

இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் சமயோசிதமாக செயல்பட்ட விமானிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த விமானத்தில் புகை எதுவும் வருகிறதா? என்று சோதனை செய்யப்பட்டது. ஆனால் புகை எதுவும் வர வில்லை என்பது ஆய்வில் தெரிந்தது.

தொழில் நுட்ப கோளாறு காரணமாக புகை எச்சரிக்கை அலாரம் ஒலித்து இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்குவாதம்

மேலும் அந்த விமானத்தில் ஏதேனும் கோளாறு உள்ளதா என்று விமான பாதுகாப்பு நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

இதனிடையே அந்த விமானத்தில் இருந்த பயணிகள் யாரும் விமானத்தை விட்டு கீழே இறங்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.

விமானத்தில் இருந்த பயணிகளுக்கு மதிய உணவு எதுவும் வழங் கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து விமான பயணிகள் அங்கிருந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக பயணிகள் விமானத்தை விட்டு வெளியே வந்து ஓய்வறையில் தங்க அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக பயணிகளின் விபரங்களை குடியேற்றத்துறை அதிகாரிகள் சரிபார்த்தனர்.

ஓட்டல்களில் முன்பதிவு

இது குறித்து அந்த விமான பயணிகள் கூறியதாவது:-

பகல் 11.45 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் மதியம் 1.30 மணிக்கு மாலத்தீவு தலைநகரம் மாலியை சென்றடைந்து இருக்க வேண்டும். நாங்கள் அங்கு தங்குவதற்காக ஓட்டல்களில் முன்பதிவு செய்திருந்தோம். ஆனால் திடீரென்று அலாரம் ஒலித்ததால் முதலில் கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கோரப்பட்டது.

அங்கு செல்ல நேரம் ஆகும் என்பதால் உடனடியாக கோவை விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கி 3 மணி நேரம் கடந்தும் எங்களுக்கு உணவு உள்பட எவ்வித ஏற்பாடுகளும் செய்ய வில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்ட பிறகு நாங்கள் விமானத்தை விட்டு வெளியேறி ஓய்வறையில் தங்க அனுமதிக்கப்பட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.