இது தொடர்பாக இன்று ( 4 ம் தேதி) சென்னை விமான நிலையத்தில் அவர் மேலும் பேசியதாவது : அவர், சோபியா விமானத்தில் கைகளை உயர்த்தி பா.ஜ., பாஷிச ஆட்சி ஒழிக என கோஷம் எழுப்பினார். நான் அமைதியாக இருந்தேன். வெளியில்,வரவேற்பரையில் காத்திருந்த போது, அவர் முறைத்து கொண்டு சென்றார். அவரிடம் விமானத்தில் கோஷமிடலாமா என கேட்டதற்கு, எனது பேச்சுரிமை எனக்கூறினார். தொடர்ந்து சொல்ல முடியாத வார்த்தைகளில் விமர்சனம் செய்தார். விமானம் பொது தளம். அதில் விமர்சனம் கூடாது என்றேன். ஆனால் அவர், அதே வார்த்தையை கூறினார். அவரது பின்னணி, இயக்கம் குறித்து சந்தேகம் உள்ளது. விமானத்தில் பயணம் செய்வதற்கு முன்னர், பா.ஜ.,வுக்கு எதிராக கோஷம் போட போவதாக சமூக வலைதளத்தில் கூறியுள்ளார்.
உரிமை
விமானத்தில் மாற்று கட்சி தலைவர்கள் பயணிக்கும் போது, கோஷம் போடலாமா? பொது மக்கள் நிலை என்னாவது? நான் தவறு செய்யவில்லை. சட்டத்தை மீறவில்லை. பேஸ்புக் பக்கத்தை பார்த்தால், எப்படி பட்ட கருத்துகளை பதிவு செய்துள்ளார். பின்புலம் பற்றி தெரியும். தேசத்தின் பாதுகாப்பு முக்கியம். மீண்டும் சொல்கிறேன். நான் தவறு செய்யவில்லை.
கண்டனம்
சோபியா கைதுக்கு ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். நான் சம்பவம் தொடர்பாக விமான நிலைய அதிகாரிகளிடம் தான் புகார் கொடுத்தேன். அவர்கள் தான் போலீசாரிடம் சென்றனர். போலீசார் முடிவெடுக்கட்டும். சோபியா தவறு செய்யவில்லை என்றால், அவர் விடுதலையாகட்டும். தவறு செய்திருந்தால், போலீசார் நடவடிக்கை எடுக்கட்டும். நான் புகாரை திரும்ப பெற மாட்டேன் என்றார்.
சோபியாவுக்கு ஜாமின்:
இதனிடையே, மாணவி சோபியாவுக்கு தூத்துக்குடி கோர்ட் ஜாமின் வழங்கியது. அவருக்கு ஜாமின் வழங்க யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஜாமினில் வெளிவரக்கூடிய 2 பிரிவுகளின் கீழ் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக அவரது வழக்கறிஞர் கூறினார்.