விபத்தில் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க அரசு பஸ்களில் ‘ அண்டர் ரன் ‘ அமைப்பு

0
7

திருப்பூர்: பஸ்களின் பக்கவாட்டு பகுதியில் டூவீலரில் வருவோர் விபத்தில் சிக்கி, உயிரிழக்கின்றனர். இதனை தடுக்க, அரசு டவுன் பஸ்களில் ‘அண்டர்ரன்’ தடுப்பு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது

விபத்தை தடுக்க பஸ்களை கவனமாக இயக்க அரசு பஸ் டிரைவர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது. இருப்பினும், ஏதேனும் ஒரு பகுதியில் விபத்து நடந்து, உயிரிழப்பு ஏற்பட்டு விடுகிறது. குறிப்பாக, கனரக வாகனங்களை விட, டூவீலரால் தான் அரசு பஸ் விபத்து, உயிரிழப்பு அதிகரிக்கிறது. இதனை தடுக்க மாநிலத்தில் இயங்கும் அனைத்து டவுன் பஸ்களிலும் ‘அண்டர்ரன்’ எனப்படும் தடுப்பு பஸ்சின் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு நடுவே, பஸ்சின் மத்திய பகுதியில் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து, அரசு போக்குவரத்து கழக உயரதிகாரிகள் கூறுகையில், ‘அண்டர் ரன் தடுப்பு அமைக்க, மாநிலத்தில் உள்ள ஏழு கோட்டங்களுக்கு தலா இரண்டு கோடி ரூபாய் வீதம், 14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மற்றும் கோவை கோட்டத்தில் இயங்கி வரும், 995 டவுன் பஸ்களில் ‘அண்டர் ரன்’ எனப்படும் தடுப்பு பலகை பொருத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுதும் அனைத்து டவுன்பஸ்களிலும் இதுபோல தடுப்பு பலகை பொருத்தும் பணி நடந்து வருகிறது.

டூவீலர், பிற வாகனங்களுக்கு மிக நெருக்கமாக பஸ்களை இயக்க கூடாது. மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும் என டிரைவர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது,’ என்றனர்.

பஸ்களை முன், பின் இயக்கும் போது டிரைவர்கள் கவனமாக இருக்கின்றனர். நகர பகுதியில், நெரிசல் மிகுந்த சாலைகளின் பஸ்களின் இடது மற்றும் வலதுபுறம் பயணிக்கும் டூவீலர் ஓட்டிகளால், சில நேரங்களில், விபத்து ஏற்படும் போது, பஸ்சின் பின்புற சக்கரங்களில் வாகனத்துடன் சிக்கிக் கொள்கின்றனர்; பஸ் அவர்கள் மீது ஏறி இறங்கி உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க, பஸ்சின் பக்கவாட்டு பகுதியில் மோதும் வாகனங்களால், உயிரிழப்பு ஏற்படாமல் இருக்க தடுப்பு அமைக்கப்படுகிறது. இதனால், மேடான, தாழ்வான பகுதியில் பஸ் இயங்கும் போது எவ்வித பிரச்னை ஏற்படாது, என்கின்றனர், தொழில்நுட்ப பணியாளர்கள்.