கோவை,: தமிழ்நாடு ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரி டெவலப்மென்ட் அசோசியேஷன் (ஏ.ஐ.டி.ஏ.டி.,) மற்றும் ‘டிட்கோ’ சார்பில், ‘டி.ஆர்.டி.ஓ., ஏரோநாடிக்கல் கிளஸ்டர்மற்றும் கொச்சி கப்பல் கட்டும் தளத்துடன் வணிக வாய்ப்பு’ என்ற, ஒரு நாள் கருத்தரங்கு கோவையில் நடந்தது.
மாநிலம் முழுதும் இருந்து, 100க்கும் மேற்பட்ட தொழில்துறையினர் பங்கேற்றனர். விண்வெளி மற்றும் கடற்படை துறைகளில், அசல் உபகரண உற்பத்தியாளர்களுக்கான (ஓ.இ.எம்.,) தொழில் வாய்ப்புகள் குறித்து, கருத்தரங்கில் விளக்கப்பட்டது.
பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.,) தலைமை இயக்குநர் ராஜலட்சுமி மேனன் பேசுகையில், “பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு பெறுவதை உறுதி செய்வது நம் கடமை. உயர் கல்வி நிறுவனங்கள், உயர் தகுதி, திறன் கொண்ட, தொழிற்துறைக்குத் தயாரான மாணவர்களை உருவாக்க வேண்டும்,” என்றார்.
ஏ.ஐ.டி.ஏ.டி. தலைவர் கிறிஸ்டோபர் பேசியதாவது:
தொழில்துறையில் தமிழகத்துக்கு சிறப்பிடம் உண்டு. எனினும், விண்வெளித் துறையில் அதிக தொழில் நிறுவனங்கள் இல்லை. டி.ஆர்.டி.ஓ., செயல்பாடுகளைப் புரிந்து கொள்வது, அதனுடன் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் இணைந்து செயல்பட உதவும்.
டி.ஆர்.டி.ஓ., இலகு ரக போர் விமானங்கள், அவற்றுக்கான இயந்திரங்கள், பெரிய அளவிலான ஆளில்லா வானூர்திகள் ஆகியவற்றை, டி.ஆர்.டி.ஓ., உருவாக்குகிறது. தொழில் நிறுவனங்கள், இத்துறையின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும்,” என்றார்.
டிட்கோ சிறப்பு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இந்திய கடற்படை உள்நாட்டு மயமாக்கல் மற்றும் சுயசார்பு மைய இயக்குநர் பாலசுந்தரம் உள்ளிட்டோர், சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.