கோவை:மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கோவைக்கு வந்ததால், 7,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்காக, திருப்பூர், ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயுதப்படை போலீசார் கோவை வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதில், ஈரோடு மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரரான பார்த்திபன், 32, கோவை சிறுவாணி சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று முன்தினம், தன் மாமியாருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அருகில் இருந்து பார்த்துக்கொள்ள விடுப்பு கேட்டுள்ளார்.
அதிகாரிகள் விடுப்பு தரவில்லை. விரக்தியடைந்த பார்த்திபன், கோவை சிறுவாணி சாலையில் மத்வராயபுரத்தில் பணியில் இருந்தபோது, நேற்று முன்தினம் இரவு சிறிய கத்தியை பயன்படுத்தி கழுத்தை அறுத்துக்கொண்டார். இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.