விசைத்தறியாளர்கள் எதிர்பார்ப்பு : புத்தாண்டிலாவது கூலி உயர்வுக்கு வழி பிறக்குமா?

0
12

சோமனுார் : பிறக்கப்போகும் புத்தாண்டிலாவது புதிய கூலி உயர்வு கிடைக்குமா என, கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 2.5 லட்சம் விசைத்தறிகள் இயக்கப் படுகின்றன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக விசைத்தறி ஜவுளி தொழில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. நிலையில்லாத மார்க்கெட், மின் கட்டணம், உதிரி பாகங்கள் விலை உயர்வு, பல ஆண்டுகளாக ஒப்பந்தப்படி கூலி உயர்வு கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால், விசைத்தறி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிடைக்காத கூலி உயர்வு

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, அதிகாரிகள் முன்னிலையில், ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் இடையே பேச்சுவார்த்தை நடக்கும். அதன் மூலம் புதிய கூலி உயர்வு முடிவு செய்யப்பட்டு அமல்படுத்தப்படும்.

ஆனால், கடந்த, 10 ஆண்டுகளாக ஒப்பந்தப்படி கூலி உயர்வு கிடைக்காததால், விசைத்தறி உரிமையாளர்கள் நொந்து போயினர். இந்நிலையில், இந்தாண்டு துவக்கத்தில், கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பினர், கோவை, திருப்பூர் மாவட்ட கலெக்டர்களை சந்தித்து, கூலி உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கைஎடுக்க கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில், இதுவரை ஆறு முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்காமல் புறக்கணித்ததால், முடிவு எடுக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால், விசைத்தறியாளர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், சோமனூர் சங்க நிர்வாகிகள், கோவையில் தொழிலாளர் நல ஆணைய அதிகாரிகளிடம் நேற்று முறையிட்டனர்.

பேச்சுவார்த்தை

கோவை, திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி சங்க நிர்வாகிகள் பங்கேற்கும் ஒப்பந்த கூலி உயர்வு பேச்சுவார்த்தை, வரும் ஜன., 8ம்தேதி கோவையில் நடக்க உள்ளதாக, தொழிலாளர் நல ஆணையர் அலுவலக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து, கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சோமனூர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘பல ஆண்டுகளாக கூலி உயர்வு கேட்டு வருகிறோம். பத்தாண்டுக்கு முன், நிர்ணயிக்கப்பட்ட கூலியை தான் தற்போது பெற்று வருகிறோம்.

இதனால், ஏற்படும் நெருக்கடிகளால் மனம் நொந்து போயுள்ளோம். வரும் புத்தாண்டில் நடக்கும் பேச்சுவார்த்தையிலாவது உடன்பாடு ஏற்பட்டு, புதிய கூலி உயர்வு கிடைக்கும், என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்’ என்றனர்.