விசைத்தறிகளுக்கு வரி சீராய்வு செய்ய தடை இலவச மின்சாரத்தில் வீடுகளில் செயல்படும்

0
8

கோவை; ‘தமிழக அரசால் இலவச மின்சாரம் வழங்கப்பட்ட, வீடுகளில் விசைத்தறிகள் செயல்பட்டால், தொழிற்சாலை பயன்பாடாக கருதி, சொத்து வரியை மாற்றக்கூடாது’ என, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சி பகுதியில், ‘டிரோன் சர்வே’ மூலம் கட்டடங்கள் மறு அளவீடு செய்யப்பட்டு, வரி சீராய்வு செய்யப்படுகிறது. வரைபட அனுமதிக்கு மாறாக, கூடுதல் பரப்புக்கு கட்டடம் கட்டியிருந்தால், பில் கலெக்டர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து, சொத்து வரியை மாற்றியமைக்கின்றனர்.

ஒரு வீட்டில் சிறியதாக கூடுதல் கட்டடம் கட்டியிருந்தாலும், சொத்து வரி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

‘டிரோன் சர்வே’ பணியை தற்காலிமாக நிறுத்தி வைக்க, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரகத்தில் இருந்து, மாநகராட்சி கமிஷனர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு இருக்கிறது.

அதில், ‘2022 ஏப்., 1ல் சொத்து சீராய்வு செய்யப்பட்ட கட்டடத்தின் அளவை விட, புதிதாக கூடுதல் கட்டடம் கட்டியிருந்தால், கூடுதல் அளவீட்டுக்கு மட்டும் வரி விதிக்க வேண்டும்; முழு பரப்புக்கும் புதிதாக வரி விதிப்பது விதிகளுக்கு முரணானது.

தமிழக அரசால் இலவச மின்சாரம் வழங்கிய, வீடுகளில் விசைத்தறி நிறுவி, தொழில் நடத்தி வந்தால், தொழிற்சாலை பயன்பாட்டுக்கு மாற்றக்கூடாது.

2022 ஏப்., 1 வரி சீராய்வுக்கு முன், கட்டப்பட்ட கட்டடங்களுக்கு புதிதாக அளவீடு செய்து, சொத்து வரி உயர்வு செய்ததாக புகார் வந்தால், சம்பந்தப்பட்டோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசுஎச்சரிக்கை விடுத்திருக்கிறார்