பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஆழியாறு – வால்பாறை வழித்தடத்தில், பாறைகள் உருண்டு விழுதல், மண்சரிவு ஏற்படும் இடங்களைக் கண்டறிந்து, ‘மண் உறுதிப்படுத்தும் திட்டம்’ வாயிலாக, பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
பொள்ளாச்சி அருகே, ஆழியாறில் இருந்து, வால்பாறை செல்லும் வழித்தடம், மலைப்பாதை வழியே நீள்கிறது. குறிப்பாக, 40 கொண்டைஊசி வளைவுகளை உள்ளடக்கிய இவ்வழித்தடத்தில், அட்டக்கட்டி மலைப்பாதையே செங்குத்தாக அமைந்துள்ளது.
இதனால், இலகு மற்றும் கனரக வாகனங்கள் இயக்கத்துக்கு வேகக்கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மழை காலத்தில் அடிக்கடி ஏற்படும் மண்சரிவு காரணமாக, போக்குவரத்து பாதிக்கிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெய்த கனமழையால், மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. வால்பாறை மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
இதேபோல, சமீபத்தில் பெய்த மழையாலும், அட்டகட்டி மலைப்பாதையில், மண்சரிவாலும், மரம் மற்றும் பாறைகள் உருண்டு விழுந்ததாலும், போக்குவரத்து தடைபட்டது.
வால்பாறையில் இருந்து, பொள்ளாச்சிக்கு செல்ல இந்த ஒரு வழித்தடம் மட்டுமே உள்ளதால், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்தும் வருகின்றனர்.
நடவடிக்கை தேவை
தன்னார்வலர்கள் கூறியதாவது:
வால்பாறை மலைப்பாதையில், நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் புவியியல் ஆராய்ச்சி துறையினர் இணைந்து, அவ்வப்போது, மழையால் மண்சரிவு ஏற்படும் இடங்களில் ஆய்வு நடத்துகினறனர்.
ஆனாலும், மண்சரிவு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் உள்ளது. மழையின்போது, மண் மற்றும் மரங்களின் வேர்ப்பிடிப்பு தளர்வடைந்து, மண்சரிவு ஏற்படுவதுடன், பாறைகளும் உருண்டு விழுகின்றன. வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் பயணிக்கினறனர்.
செயற்கையான ஏற்பாடுகள் வாயிலாக மண்சரிவை தடுக்க வேண்டும். மண்சரிவு ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு, வனத்துறை ஒத்துழைப்புடன் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உறுதிப்படுத்தும் திட்டம்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைப்பாதையில், நெடுஞ்சாலையில் நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவைத் தடுக்க பசுமை தொழில்நுட்ப முறையான ‘மண் உறுதிப்படுத்தும்
திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, பாதிப்பு உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு, அங்குள்ள மண் மாதிரிகள் சேகரித்து அவற்றின் தன்மை குறித்த ஆய்வு நடத்தப்படுகிறது. புவிஈர்ப்பு கேபியன் தடுப்புச் சுவர் கட்டப்படுகிறது.
மண் சரிவைத் தடுக்கும் வகையில், நங்கூர ஆணியுடன் மெல்லிய கம்பிவலை கொண்ட தடுப்புச் சுவர் அமைத்து, தண்ணீர் உட்புகாத வகையில் நவீன தொழில்நுட்ப முறையில் தாவரங்களை வளர்க்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்தை வால்பாறை மலைப்பாதையில் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.