வால்பாறை சோதனை சாவடிகளில் வாகன தணிக்கை தீவிரம்

0
63

வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க அட்டகட்டி, மளுக்கப்பாறை சோதனை சாவடிகளில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

சுற்றுலா பயணிகள்

வால்பாறை பகுதியில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை கோடைகாலமாக இருப்பதால் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் பயன்படுத்திய பிறகு காலி பிளாஸ்டிக் பாட்டில்கள், உணவு பொட்டலங்களை வனப்பகுதியிலும், தேயிலை தோட்டத்திலும் வீசியெறிந்து செல்கின்றனர். இதனால் சுற்றுப்புற சூழல் பாதிப்பு, வனவிலங்குகளுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படுகிறது.

இதை தடுக்க நகராட்சி ஆணையாளர் பாலு உத்தரவின் பேரில் துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான பணியாளர்கள் குழுவினர் சுற்றுலா பயணிகள் கூடும் இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் தடுப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

அறிவுரை

இது தவிர வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனத்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அட்டகட்டி வனத்துறை சோதனை சாவடி, தமிழக-கேரள எல்லையில் உள்ள மளுக்கப்பாறை வனத்துறை சோதனை சாவடியில் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனை செய்கின்றனர். பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்தால் பறிமுதல் செய்வதோடு காகித பைகளை வழங்கி வருகின்றனர்.

மேலும் வாகனத்தில் செல்லும்போது எந்தவொரு பொருளையும் வெளியே வீசியெறிய கூடாது, குறிப்பாக காட்டுத்தீ பரவும் வகையில் பீடி, சிகரெட் புகைத்துவிட்டு வெளியே வீசியெறியக்கூடாது என்று அறிவுரை வழங்கி வருகிறார்கள்.