வால்பாறை-சாலக்குடி சாலையில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

0
136
வால்பாறை,
வால்பாறை மலைப்பகுதியில் பெரியளவில் சுற்றுலாதலங்கள் ஏதும் இல்லை. ஆனாலும் வால்பாறைக்கு அதிகளவில் சுற்றுலாபயணிகள் வருவதற்கு காரணம் வால்பாறை பகுதியின் இயற்கை சூழலும், பசுமையான தேயிலைத் தோட்டங்களும், குளிர்ந்த காலசூழ்நிலையும் தான் காரணம். அதே நேரத்தில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதற்கு முக்கிய காரணமாக விளங்குவது கேரள மாநிலம் சாலக்குடிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிதான்.
வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலாபயணிகள் அதிகம் செல்லக்கூடிய ஒரே இடம் இந்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி தான். வால்பாறையிலிருந்து 110 கிலோ மீட்டர் தூரத்திலும், சோலையார்அணை பகுதியிலிருந்து 80 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. சோலையார்அணை பகுதியிலிருந்து அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழி முழுவதும் அதிகளவில் வனவிலங்குகள் நடமாடக் கூடிய அடர்ந்த வனப் பகுதியாகும்.
இந்த அடர்ந்த வனப்பகுதி சாலையில் பகல் நேரத்திலேயே அதிக எண்ணிக்கையில் காட்டுயானைகள் சாலையின் குறுக்கே நிற்பது வாடிக்கையானது. இதே போல காட்டெருமைகள், மான்கள், சிறுத்தைப்புலிகள் இந்த சாலையில் அதிகளவில் நடமாடி வருகின்றன. குறிப்பாக காட்டுயானைகள் அதிகளவில் கடந்த சில நாட்களாக நடமாடி வருகின்றன. கடந்த சில நாட்களாக இந்த வழியாக சென்று வந்த சுற்றுலாபயணிகளும், கேரள அரசு பஸ் மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் சாலையின் குறுக்கே காட்டுயானைகள் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் பல சுற்றுலாபயணிகள் சாலைகளின் ஓரத்தில் நிற்கும் காட்டுயானைகளுக்கு அருகில் சென்று புகைப்படம் எடுப்பது, அவைகளை தொந்தரவு செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் கோபமடையும் காட்டுயானைகள் வாகனங்களை துரத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகிறது. இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
சோலையார்அணை பகுதியிலிருந்து அதிரப்பள்ளிக்கு செல்லும் சுற்றுலாபயணிகள் வனப்பகுதிகளின் ஓரங்களிலும், சாலைகளிலும் நிற்கும் காட்டுயானைகளை தொந்தரவு செய்யவேண்டாம். கவனமாக செல்லவேண்டும். காட்டுயானைகள் சாலையில் நிற்பதை பார்த்தால் அவைகளை கூச்சலிட்டோ, ஹாரன் ஒலி எழுப்பியோ தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து வாகனத்தை சற்று பின்னோக்கி எடுத்து சிறிது நேரம் காத்து நின்றால் யானைகள் வனப்பகுதிக்குள் சென்று விடும். இந்த வழியாக செல்லக் கூடிய சுற்றுலாபயணிகள், வாகன ஓட்டிகள் குறிப்பாக இரண்டு சக்கர வாகனங்களில் வரும் சுற்றுலாபயணிகள் யானைகளை தொந்தரவு செய்வதை கண்டறிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழியாக மாலை 5 மணிக்கு மேல் வாகனங்கள் அனுமதிப்பதில்லை. எனவே இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தங்களது பயணத்தை மாலை 3 மணிக்குள் மளுக்கப்பாறை வனத்துறை சோதனையை கடந்து சென்றால் பாதுகாப்பாக இருக்கும். மாலை 5 மணிக்கு கடந்து செல்லும் போது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்வதற்குள் இருட்டிவிடும். இதனால் பாதுகாப்பற்ற நிலைஏற்படும். எனவே இரண்டு சக்கர வாகனங்களில் வருபவர்கள் இவற்றை கருத்தில் கொண்டு தங்களது பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.