வால்பாறை உட்கோட்டத்தில் போதைப் பொருள் விற்றதாக இதுவரை 127 பேர் கைது

0
62

வால்பாறை உட்கோட்டத்தில் போதைப் பொருள் விற்றதாக இதுவரை 127 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தாத்தூர் ஊராட்சி தேர்வு

வால்பாறை உட்கோட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையத்தில் உள்ள பேரூராட்சி, கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள பொது மக்களிடமும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களிடம் போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். மேலும் கிராமங்கள் தோறும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகள் வைத்தனர். போதைப் பொருட்களை விற்பனை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதால், கிராமப்புறங்களில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வது முற்றிலும் தடுக்கப்பட்டது. இதனால் கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் இல்லாத பகுதியாக தாத்தூர் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதனை சிறப்பிக்கும் வகையில் தாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்தி வாசன் முன்னிலை வகித்தார். தாசில்தார் ரேணுகாதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி நிருபர்களிடம் கூறியதாவது:- கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தாத்தூர் ஊராட்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் இல்லாத ஊராட்சியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுபோல் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் கஞ்சா இல்லாத கிராமமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடிக்கடி கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்வது, கடத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்து கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். இதில் ஊராட்சித் தலைவர் அன்னபூரணி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கவுதம் செல்வராஜ், முருகவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கடந்த 5 ஆண்டுகளில் வால்பாறை உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் 91 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 45 ஆயிரத்து 174 கிலோ கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கைப்பற்றியும், 127 பேரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.