வால்பாறை : ‘தினமலர்’ நாளிதழ் செய்தி எதிரொலியால், வால்பாறையில் ஏழு இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளன.
சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறை நகரில், முக்கியமான இடங்களில் வேகத்தடை இல்லாததால், அதிவேகமாக வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.
குறிப்பாக, இரு சக்கர வாகனங்களில் வரும் சுற்றுலா பயணியர் விபத்துக்குள்ளாகின்றனர். சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. வால்பாறை நகர் சுப்ரமணிய சுவாமி கோவில், ஸ்டேன்மோர் ரோடு, சோலையாறுடேம் செல்லும் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், வேகத்தடை அமைக்க வேண்டும், என, ‘தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து, வால்பாறையில் ஏழு இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், வேகத்தடை அமைக்கபட்டுள்ளது. விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டுநர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.