வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரம், சோலையார் அணையின் நீர்மட்டம் உயர்வு – மின்உற்பத்தி தொடங்கியது

0
99

வால்பாறை வட்டார பகுதி முழுவதும் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் அதிகாலை முதல் வால்பாறை நகர்பகுதி மற்றும் எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தெற்மேற்கு பருவ மழை தீவிரமடையத்தொடங்கியுள்ளதால் வால்பாறை பகுதியில் உள்ள பல்வேறு ஆறுகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. சோலையார் அணையின் நீர்மட்டம் அதிகரித்ததால் சோலையார் மின்நிலையம்-2 மூலம் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

மழை காரணமாகவும், பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தின் முக்கிய அணையாக இருக்கும் சோலையார் அணைக்கும், மேல் நீரார் மற்றும் கீழ் நீரார் அணைகளுக்கும் தண்ணீர் வரத்து ஏற்பட்டு வருகிறது. தற்போது சோலையார் அணையின் நீர்மட்டம் 37.43 அடியாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது வால்பாறை பகுதியில் தென் மேற்கு பருவமழை குறைவாக பெய்து வந்த நிலையில் பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள், வனத்துறையினர், பொதுப்பணித்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வால்பாறை பகுதி முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிர மடைந்து பெய்து கொண்டிருப்பதால் கருமலை ஆற்றில் தண்ணீர் அருவியாக கொட்டத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் வால்பாறையில் 25 மி.மீ மழையும், சோலையார் அணையில் 31 மி.மீ மழையும், கீழ்நீராரில் 27 மி.மீ மழையும், மேல்நீராரில் 30 மி.மீ மழையும் பெய்துள்ளது. சோலையார்அணைக்கு வினாடிக்கு 448.26 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. சோலையார் மின்நிலையம்-2 இயக்கப்பட்டு ஒரு மணிநேரத்திற்கு 16 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மின் உற்பத்திக்குப்பின் 527 கனஅடித்தண்ணீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.