வால்பாறையில் கடையடைப்பு போராட்டம் ; சுற்றுச்சூழல் மசோதாவை ரத்து செய்யக் கோரிக்கை

0
7

வால்பாறை; மத்திய அரசின், ‘சுற்றுச்சூழல் நுண் உணர்வு மசோதா’வை ரத்து செய்யக்கோரி, வால்பாறையில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.

மத்திய அரசு ‘சுற்றுச்சூழல் நுண் உணர்வு மசோதா’ வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், வளமையான வனம், உயிரினங்கள், நீர் ஆதாரம், நதிகள் ஆகியவற்றை எதிர்காலங்களில் மாசில்லாமல் பேணிக்காக்க வேண்டும்.

இயற்கையுடன் இணைந்து மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் வாழும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும். நீர் ஆதாரங்களின் முழுபயனை அடையவும், நீரின்றி வறண்டு கிடக்கும் நிலபரப்பிற்கு, இங்குள்ள நீரீனை கொண்டு சென்று பயன்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களை முன்னிருத்தி, மத்திய அரசு இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளது.

தமிழகத்தில், வால்பாறை உள்ளிட்ட, 183 கிராமங்களில் இந்த மசோதா தாக்கல் செய்த பின் அதனை சட்ட வடிவாக்கி நடைமுறைப்படுத்துவது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை அமல்படுத்தினால், வால்பாறை மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதனால், இந்த மசோதா வரைவு அறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி, வால்பாறை மக்கள் உரிமை மீட்பு குழு சார்பில் நேற்று கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு ஆதரவாக, வால்பாறை நகரில் உள்ள அனைத்துக்கடைகளும் அடைக்கப்பட்டன. ஆட்டோ, டூரிஸ்ட் கார், வேன் உள்ளிட்ட எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை. இதனால், வால்பாறையில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. வால்பாறை காந்திசிலை வளாகத்தில் நடந்த, கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு வால்பாறை மக்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஜெபராஜ் தலைமை வகித்தார். இதில் அமீது, மயில்கணேஷ் (அ.தி.மு.க.,), பாலாஜி, தங்கவேல் (பா.ஜ.,), மோகன் (இ.கம்யூ..) பரமசிவம் (சி.ஐ.டி.யு.,), பிரபாகரன் (காங்.,), கல்யாணி (ம.தி.மு.க.,), வியாபாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள், தங்கும்விடுதி உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் நுாற்றுக்கணக்கான வியாபாரிகள், பல்வேறு அமைப்புக்களை சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.