வால்பாறையில் ஆம்புலன்ஸ் அச்சு முறிந்து சக்கரம் கழன்று ஓடியது, கர்ப்பிணி-பணியாளர்கள் உயிர்தப்பினர்

0
95
வால்பாறை,
வால்பாறை பகுதி அரசு ஆஸ்பத்திரி மற்றும் வால்பாறை, சோலையார்நகர், முடீஸ் அரசு ஆரம்பசுகாதார நிலையங்களுக்கு அவசர தேவைகளுக்காக நான்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இவைகள் தரமில்லாத வகையில், மலைப் பகுதியில் இயங்குவதற்கு தகுதியற்ற நிலையில் இருந்து வருகின்றன. இதனால் அவசர சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதற்கு முக்கிய காரணம் வால்பாறை மலைப் பகுதியில் இயங்கிவரும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அடிக்கடி பழுதடைந்து ஆங்காங்கே சாலைகளில் நின்று விடுகின்றன. இது குறித்து 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் பொறுப்பு அதிகாரிகள் மற்றும் நிறுவனத்தினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் சோலையார்நகர் பகுதியில் உள்ள கர்ப்பிணி ஒருவரை மருத்துவ பரிசோதனைக்காக 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து கொண்டிருந்தனர். டிரைவர் வாகனத்தை ஓட்டினார். மருத்துவ தொழில்நுட்ப பணியாளர் ஒருவரும் உடன் வந்தார்.
108 ஆம்புலன்ஸ் வாகனம் ரொட்டிக்கடை எஸ்டேட் பகுதிக்கு வரும் போது திடீரென அதன் முன் பகுதியில் பலத்த சத்தம் கேட்டது. டிரைவர் ஆம்புலன்சை நிறுத்தி விட்டு பார்ப்பதற்கு சென்ற போது இடது பக்க மு ன் சக்கரத்தின்அச்சு முறிந்து சக்கரம் கழன்று தனியாக ரோட்டில் ஓடியது. இதனால் அதிர்ச்சி அடைந் அவரும், பணியாளரும், கர்ப்பிணிப்பெண்ணை வாகனத்தில் இருந்து இறக்கி அருகிலிருந்த கோவிலில் உட்கார வைத்தனர்.
பின்னர் இது குறித்து பணியாளர் 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து கோட்டூரில் இருந்து, மாற்று 108 ஆம்புலன்ஸ் வாகனம் வருவதற்கு ஏற்பாடு செய்தனர். இருந்தாலும் காலதாமதம் ஏற்படும் என்பதால் வால்பாறையில் இருந்து மற்றொரு நோயாளியை ஏற்றிக் கொண்டு வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் இந்த கர்ப்பிணி பெண்ணையும் ஏற்றிக் கொண்டு சென்றனர்.
பின்னர் எதிரே அட்டகட்டியருகே வந்த கோட்டூர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் நடுவழியில் கர்ப்பிணி பெண்ணை மாற்றி, ஏறிக்கொண்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
ரொட்டிக்கடை பகுதியில் ஏற்பட்ட இந்த சம்பவம் வால்பாறை -பொள்ளாச்சி மலைப்பாதையில் கொண்டு ஊசி வளைவு பகுதிகளில் ஏற்பட்டிருந்தால் பெரிய அளவிலான விபத்து ஏற்பட்டு உயிர் சேதமும் ஏற்பட்டிருக்கும். இதுபோன்ற மோசமான ஆம்புலன்ஸ் வாகனங்கள் வால்பாறையில் உள்ளதால் நோயாளிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளது. இது குறித்து தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காமலே உள்ளனர்.
ஆகவே இனியும் காலங்கடத்தாமல் 108 ஆம்புலன்ஸ் வாகன நிறுவனத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து புதிய தரமான 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்குதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் வால்பாறை பகுதி பொதுமக்கள், வியாபாரிகள், எஸ்டேட் பகுதி மக்கள் பெரிய அளவிலான போராட்டங்களை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.