வாரி வழங்க வேண்டுகோள்: வசூல் ‘பறக்கிறது!’ இந்தாண்டு கொடி நாள்

0
15

கோவை: படைவீரர்களுக்கான கொடி நாள் நிதி வழங்கும் நிகழ்ச்சியை, கோவை கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கிராந்திகுமார், நேற்று நிதி வழங்கி, துவக்கி வைத்தார். அதிகமாக நிதி வசூலித்துக் கொடுத்த அரசு அலுவலர்களுக்கு, பதக்கம் வழங்கி கவுரவித்தார்.

கோவை மாவட்டத்தில், 4,573 முன்னாள் படைவீரர்கள், 2,168 விதவையர் உள்ளனர். 192 பயனாளிகளுக்கு, ரூ.1.11 கோடியில் ஆயுட்கால நிதியுதவி, 203 பயனாளிகளுக்கு ரூ.19.12 லட்சத்தில் நிதியுதவி முன்னாள் படைவீரர் நல நிதியில் இருந்து வழங்கப்பட்டது.

மத்திய ராணுவ அமைச்சரின் விருப்புரிமை நிதியுதவி, 208 பயனாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தில், முன்னாள் படைவீரர்களின் 12 குழந்தைகளுக்கு உதவித்தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது. 59 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கு, ரூ.8.80 லட்சத்தில் நலத்திட்ட உதவியை கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில், கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது:

நமது நாட்டில் முப்படைகளிலும் பணியாற்றி, தாயகத்தை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள படைவீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்கள், அவர்களது குடும்பத்தினரை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் டிச., 7ல் படைவீரர் கொடி நாள் அனுசரிக்கப்படுகிறது.

வசூலிக்கப்படும் தொகையில் இருந்து, முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர் நலனுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. 2023ம் ஆண்டு கோவை மாவட்டத்துக்கு, இரண்டு கோடியே, ஏழு லட்சத்து, 90 ஆயிரம் ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இரண்டு கோடியே, 21 லட்சத்து, 77 ஆயிரத்து, 675 ரூபாய் வசூலிக்கப்பட்டது; இது, 107 சதவீதம். இதில், கோவை மாநகராட்சிக்கு, 56 லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 76 லட்சத்து, 33 ஆயிரத்து, 325 ரூபாய் வசூலிக்கப்பட்டது; இது, 136 சதவீதம். கடந்தாண்டை போலவே, கொடி நாள் நிதியை பொதுமக்கள் தாராளமாக வழங்க வேண்டும்.

இவ்வாறு, கலெக்டர் பேசினார்.

நிகழ்ச்சியில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் ரூபா சுப்புலட்சுமி, ஆர்மி ஸ்டேஷன் தலைமையிடம் கர்னல் முரளிதரன், ஐ.என்.எஸ்., அக்ரானி லெப்டினன்ட் கர்னல் சுந்தரபாண்டியன், போலீஸ் துணை கமிஷனர் சுஹாசினி உட்பட பலர் பங்கேற்றனர்.