வாகன தணிக்கை செய்து ‘பாடம்’ நடத்திய எஸ்.பி., ; அதிவேகமாக வாகனம் ஓட்டக் கூடாதென அறிவுரை

0
5

பொள்ளாச்சி,; பொள்ளாச்சியில், எஸ்.பி., தலைமையில் போலீசார் திடீரென வாகன தணிக்கையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி நகரில், தேர்நிலையம், பல்லடம் ரோடு – மகாலிங்கபுரம் ஐந்து ரோடு சந்திப்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.சந்தேகப்படும்படி நபர்களை பிடிப்பது, போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், எஸ்.பி., கார்த்திக்கேயன், மரப்பேட்டை பகுதியில், போலீசாருடன் இணைந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, பதிவு எண் இல்லாத வாகனங்கள், ெஹல்மெட் அணியாத வாகன ஓட்டுநர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, பல்லடம் ரோட்டில், மகாலிங்கபுரம் அருகே ஐந்து ரோடு சந்திப்பு பகுதியில் போலீஸ் சோதனைச்சாவடி பகுதியில் ஆய்வு செய்தார்.அப்போது, அவ்வழியாக வாகனங்களில் வந்த கல்லுாரி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அப்போது எஸ்.பி., கூறுகையில், ”வாகனங்களில் பாதுகாப்பாக செல்ல வேண்டும். ெஹல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களையும், சீட் பெல்ட் அணியாமல் காரையும் ஓட்டக்கூடாது.

அதே போன்று, விதிமுறை மீறி, அதிவேகமாக செல்வதுடன், இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் அமர்ந்து செல்வது விபத்துக்கு வழிவகுக்கும். இதை தவிர்க்க வேண்டும்.

வேகமாக செல்வதால் நீங்கள் மட்டுமின்றி எதிரே வரும் வாகன ஓட்டுநர்களும் விபத்தில் சிக்கி பாதிக்கப்படுவர். எனவே, ரோடுகளில் செல்லும் போது பொறுப்பு உணர்ந்து பாதுகாப்பாகவும், விதிமுறைகளை பின்பற்றியும் செல்ல வேண்டும்,” என்றார்.

தொடர்ந்து, போலீசாருடன் இணைந்து கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டார். அப்போது, போலீசாரிடம், ‘உரிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். சந்தேகப்படும்படி நபர்கள் நடமாட்டம் உள்ளதா என கண்டறிய,

கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

பஸ் ஸ்டாண்டில் இரவு நேரங்களில் சுற்றுவோரை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்,’ என, அறிவுறுத்தினார்.