வாகன சோதனையின்போது தகராறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய அண்ணன்-தம்பி கைது

0
94

கோவையை அடுத்த சூலூர் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் மருதையா பாண்டி. இவரது தலைமையில் சூலூர்- திருச்சி சாலையில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 2 வாலிபர்களை தடுத்தி நிறுத்தினார்கள். அப்போது அவர்கள் ஓட்டுனர் உரிமம் உள்பட எந்தவித ஆவணங்களும் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது அதில் ஒரு வாலிபர் சப்-இன்ஸ்பெக்டரிடம், எப்போது பார்த்தாலும் எங்களை மட்டுமே தடுத்து நிறுத்தி சோதனை செய்கிறீர்கள் என்று கூறினார். இதனால் அந்த வாலிபருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் 2 பேரும் சேர்ந்து சப்-இன்ஸ்பெக்டரின் சட்டையை பிடித்து அவரை தாக்கியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனே சுதாரித்து அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். இதையடுத்து அவர்கள் சூலூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். விசாரணையில், அவர்கள் சூலூர் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவரது மகன்களான நவீன் (வயது 24), மனோஜ்குமார் (21) என்பது தெரியவந்தது. சகோதரர்கள் 2 பேரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் வாகன சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் மாட்டிக்கொண்டனர். இதனால் அவர்களுடைய மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு சூலூர் போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது. அதை இன்னும் மீட்கவில்லை. இந்தநிலையில் மீண்டும் அவர்கள் வாகன சோதனையில் சிக்கியதால் ஆத்திரத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியது தெரியவந்தது. இதுகுறித்து சூலூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நவீன் மற்றும் மனோஜ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் சூலூர் குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.