நெகமம் அருகே வடசித்தூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து பனப்பட்டி செல்லும் சாலையோரங்களில் உள்ள ஆற்றங்கரை ஓடை பகுதியில் காட்டுப்பன்றி, முயல், முள்ளம்பன்றி, மயில், புள்ளிமான்கள் உள்ளிட்டவை சுற்றித்திரிகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புள்ளி மான் ஒன்று உணவு, தண்ணீர் தேடி ஓடையை விட்டு வெளியில் சாலை பகுதிக்கு வந்தது. அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று புள்ளி மான் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் புள்ளி மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் புள்ளிமான் இறந்து கிடப்பது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த பொள்ளாச்சி வனத்துறையினர் புள்ளிமான் இறந்தது குறித்தும், புள்ளி மான் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழந்ததா? அல்லது வேட்டையாடப்பட்டதா? என்கிற கோணத்தில் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.