வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடும் சிறுத்தை

0
6

கோவை, மார்ச் 26: கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டு யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இவை அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகில் உள்ள கிராமங்களுக்குள் நுழைவது வழக்கம். இந்த நிலையில் மதுக்கரை அருகே உள்ள குமிட்டிபதி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.

சிறுத்தை இரவு நேரங்களில் கிராமத்திற்குள் நுழைந்து ஆடு, நாய் போன்ற வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வருகிறது.  இதனிடையே அப்பகுதியில் கூண்டு அமைத்தும், கண்காணிப்பு கேமரா பொருத்தியும், தனிக்குழு அமைத்தும் வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் சிறுத்தை பிடிபடாமல் இருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘தொடர்ச்சியாக சிறுத்தை ஆடு, நாய் போன்ற வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி, சாப்பிட்டு வருகிறது. இதனை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டும் அமைத்தாலும், இதுவரை சிறுத்தை பிடிபடாமல் உள்ளது. சிறுத்தையை விரைவாக பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.