வளர்ப்பு நாய் கடித்தாலும் ரேபீஸ் தொற்று பரவ வாய்ப்பு: டாக்டர்கள் கடும் எச்சரிக்கை

0
10

கோவை: நாய்க்கடி என்றாலே, அதை வெறிநாய் கடியாகவே கருதி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்; அப்போதுதான் ரேபீஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க இயலும் என, டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனையில், நாய் கடியால் பாதிக்கப்பட்ட நபர், ரேபீஸ் தொற்று ஏற்பட்டு கொடூரமான முறையில், தற்கொலை செய்த சம்பவம், அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், மருத்துவ ரீதியாக இது ‘தற்கொலை அல்ல; இந்நோயின் தன்மை காரணமாகவே இதுபோன்ற முயற்சியில் அந்நபர் ஈடுபட்டதாக, அரசு மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

நோய் பரவுவது எப்படி?

பொதுவாக, ரேபீஸ் நோய் என்பது, எந்த நாய் கடித்தாலும் ஏற்படும் என்று கூறமுடியாது. ரேபீஸ் வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட, நாய், ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, நரி, கீரி, ஓநாய், வவ்வால் போன்றவை கடித்தாலும், இப்பாதிப்பு ஏற்படலாம். இந்தியாவில் பெரும்பாலும், நாய்கள் மூலமாகவே மனிதர்களுக்கு இந்நோய் தொற்றுகிறது.

ஓய்வு பெற்ற டாக்டர் செந்தில் கூறியதாவது:

வளர்ப்பு நாயாக இருந்தாலும் கடித்தால், தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். நாய்க்கடிக்காக 100 பேர் சிகிச்சைக்கு வருகிறார்கள் என்றால், அதில் 30 பேர் வளர்ப்பு நாய் கடித்தே வருகின்றனர்.

‘நம்ம நாய்தான், நம்ம தெரு நாய் தான், பழகிய நாய்தான்’ என பலர், அலட்சியமாக இருப்பதால், உயிரிழப்பு வரை சென்றுவிடுகிறது. நாய் கடியின் தன்மை பொறுத்து சிகிச்சை முறைகளும் மாறுபடும்.

அதே போன்று, நாய் வளர்ப்பவர்கள் உரிய தடுப்பூசிகளை நாய்களுக்கு சரியான நேரத்தில் செலுத்த வேண்டும். சிலர் ஒன்று, இரண்டு தடுப்பூசி போட்டுவிட்டு அலட்சியமாக விட்டு விடுகின்றனர். இது தவறானது.

கடித்தவுடன் செய்ய வேண்டியது

நாய் கடித்தவுடன், தண்ணீர் குழாயை நன்கு திறந்து விட்டு, அதில் காயத்தை காண்பித்து, 15 நிமிடம் சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். காயத்தை மூடாமல், மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

ரேபீஸ் பாதிப்பு வந்துவிட்டாலே, அதை குணப்படுத்த முடியாது. எந்த நாய் கடித்தாலும் வெறிநாய் கடி என கருதி, சிகிச்சை எடுத்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.

பாதிப்புள்ள நாய் கடித்தால் மட்டும் அல்ல, மனிதர்கள் உடலில் சிறு காயம் இருந்து, அதில் நக்கினாலே இப்பாதிப்பு ஏற்படும். ஏன், நாம் அரிப்பில் சொறிந்த இடத்தில் நாய் நக்கினாலே, அதன் வழியாகவும் ரேபீஸ் பரவ வாய்ப்புண்டு

இவ்வாறு, அவர் கூறினார்.

‘அலட்சியம் கூடாது’

அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ”நாய்க்கடியை அலட்சியமாக எடுத்துக்கொள்ள கூடாது. வளர்ப்பு நாயாகவே இருந்தாலும், முத்தம் கொடுப்பது, நக்குவதை அனுமதிக்கக்கூடாது. உரிய தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். நாய் கடித்தால், கட்டாயம் உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்,” என்றார்.

அறிகுறிகள்

”வெறிநாய் கடித்த நபருக்கு கடும் மனகுழப்பம் ஏற்படும். என்ன செய்கின்றோம் என தெரியாமல், அங்குமிங்கும் அலைவர். வாயில் உமிழ்நீர் வடியும். வெளிச்சம், சத்தம் என்றால் உடலில் நடுக்கம் ஏற்படும். தண்ணீரை பார்த்தால் மூச்சிரைப்பு ஏற்படும்,” என்றார் டாக்டர் செந்தில்.