வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளான இந்தியா, சீனாவுக்கு மானியம் நிறுத்தப்படும்; டிரம்ப் பேச்சு

0
126

சிகாகோ,

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடக்கு டகோட்டா பகுதியில் உள்ள ஃபார்கோ சிட்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.  அவர் பேசும்பொழுது, சில நாடுகளை வளரும் பொருளாதார நாடுகள் என நாம் கூறி வருகிறோம்.  சில நாடுகள் சரியான வளர்ச்சியை அடையவில்லை.  அதனால் அந்நாடுகளுக்கு நாம் மானியம் வழங்கி வருகிறோம்.

இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தங்களை வளர்ந்து வரும் நாடுகள் என கூறி கொள்கின்றன.  அந்த பிரிவின் கீழ் அவர்கள் மானியம் பெற்று கொள்கின்றனர்.  நாமும் அவர்களுக்கு நிதி வழங்குகிறோம்.

இது முற்றிலும் பைத்தியக்காரத்தனம் மிக்கது.  இந்த நாடுகளுக்கான மானியம் வழங்குவது நிறுத்தப்படும்.  நாமும் ஒரு வளர்ந்து வரும் நாடே.  அந்த பிரிவின்கீழ் இருக்கவே நான் விரும்புகிறேன்.  ஏனெனில் நாங்களும் வளர்ந்து வருகிறோம்.  மற்றவர்களை விட வேகமுடன் நாங்கள் வளர போகிறோம் என கூறியுள்ளார்.  இதனை தொடர்ந்து கூட்டத்தினரிடையே பலத்த கைத்தட்டல் எழுந்தது.

ஒரு பெரிய பொருளாதார சக்தி வாய்ந்த நாடாக ஆவதற்கு சீனாவை உலக வர்த்தக அமைப்பு அனுமதித்து வருகிறது என டிரம்ப் குற்றச்சாட்டும் கூறியுள்ளார்.

அமெரிக்கா, வளமிக்க பிற நாடுகளுக்கு தீங்குகள் எதுவும் ஏற்படாமல் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.  சில நாடுகள் எங்களை விரும்பவில்லை என்றாலும் கூட நாங்கள் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறோம்.  அதனால் அமெரிக்காவுக்கு அவர்கள் மரியாதை அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.