வரி, குடிநீர் கட்டணம் செலுத்தா விட்டால் நடவடிக்கை ! நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

0
7

பொள்ளாச்சி : ‘நகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்து, உடனடியாக வரி மற்றும் குடிநீர் கட்டணத்தை செலுத்த வேண்டும். தவறினால், குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும்,’ என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி நகராட்சியில், ஆண்டுதோறும், சொத்து வரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குப்பை சேவை கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்ட வகையில், 33.77 கோடி ரூபாய் பெறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக, வரி இனங்கள், கட்டணம் மற்றும் வாடகை உள்ளிட்டவைகளை உரிய காலக்கெடு முடிந்தும், செலுத்தாமல் சிலர் நிலுவை வைத்துள்ளனர்.

இது குறித்து, நகராட்சி கமிஷனர் கணேஷன் அறிக்கை:

கடந்தாண்டு வரை, சொத்து வரி, 6.86 கோடி ரூபாய், காலிமனை வரி, 1.97 கோடி ரூபாய், குடிநீர் கட்டணம், 35 லட்சத்து, 83 ஆயிரம் ரூபாய், பாதாள சாக்கடை கட்டணம், 45 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் செலுத்தாமல் நிலுவையில் உள்ளது.

அதேபோல, நடப்பாண்டு செலுத்த வேண்டிய சொத்து வரி, 8.55 கோடி ரூபாய், காலி மனை வரி 83 லட்சம் ரூபாய், குடிநீர் கட்டணம், 1.75 கோடி ரூபாய், தொழில் வரி 96 லட்சத்து, 90 ஆயிரம் ரூபாய், குப்பை சேவை கட்டணம், 45 லட்சத்து, 25 ஆயிரம் ரூபாய், பாதாள சாக்கடை கட்டணம் 72 லட்சத்து, 31 ஆயிரம் ரூபாய் நிலுவையில் உள்ளது.

வரிகளை செலுத்தாத வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின், ஜி.எஸ்.டி., உரிமத்தை ரத்து செய்யவும், மின் இணைப்பு துண்டிக்கவும் சம்பந்தப்பட்ட அரசு துறைகளுக்கு பரிந்துரைக்கப்படும்.

காலிமனை வரி செலுத்தாமல் நிலுவை வைத்திருக்கும் விபரங்கள் பத்திரப்பதிவு துறைக்கு தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, நகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரி மற்றும் கட்டணங்களை உடனடியாக செலுத்த வேண்டும். இதற்காக, அனைத்து, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வரி வசூல் மையம் செயல்படுகிறது. இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.