மேட்டுப்பாளையம்; வனவிலங்குகள் தாக்குதலை தடுக்க கோபனாரியில் சாலையோர புதர்களை அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
காரமடை அருகே கோபனாரி வனப்பகுதி உள்ளது. கேரள எல்லையில் அமைந்துள்ள இந்த வனப்பகுதி வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அப்போது சாலையோரம் மற்றும் அப்பகுதியில் உள்ள புதர்களுக்குள் யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் நிற்பதை சிலர் வாகனங்களை நிறுத்தி கண்டு ரசிக்கின்றனர். ஆபத்தை உணராமல் புகைப்படங்களை எடுக்கின்றனர். அந்த சமயத்தில் சாலையோர புதர்களில் மறைந்திருக்கும் வனவிலங்குகளால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வனவிலங்குகள் தாக்குதலை தடுக்க தோலம்பாளையம் மேல்பாவி செக்போஸ்ட் முதல் பட்டிசாலை செக்போஸ்ட் வரை உள்ள சாலையின் இருபுறமும் காணப்படும் புதர்களை இயந்திரங்கள்வாயிலாக அகற்றும் பணியில்
வனத்துறையினர்ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, வனத்துறையினர் கூறுகையில், புதர்களை அகற்றுவது வாயிலாக புதரில் மறைந்து உள்ள வனவிலங்குகளை எளிதில் கண்டறிய முடியும். வனவிலங்குகளிடம் வாகன ஓட்டிகள் சிக்காமல் இருக்க உதவியாக இருக்கும். மேலும், அந்நிய களைச்செடிகளும் அகற்றப்படுகின்றன. அகற்றிய இடத்தில் மரக்கன்றுகள் நடப்படும், என்றனர்.——-