வனவிலங்குகளிடம் இருந்து காக்க தீ பந்தம் ஏந்தி மக்கள் போராட்டம்

0
6

வால்பாறை; வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்க கோரி, கேரள மாநிலம் அதிரப்பள்ளி மக்கள், தீ பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் சாலக்குடி – வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளால், சுற்றுலா பயணியர் அதிகளவில் சென்று வருகின்றனர்.

வால்பாறை – அதிரப்பள்ளி ரோட்டில் சமீப காலமாக யானை, சிறுத்தை, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால், மளுக்கப்பாறை, வெற்றிலைப்பாறை, அதிரப்பள்ளி உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த வாரம் மளுக்கப்பாறை எஸ்டேட் ரோட்டில் நடந்து சென்ற தொழிலாளி சஞ்சய், 24, என்பவர் காட்டுமாடு தாக்கியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், வனவிலங்குகளின் தொல்லையிலிருந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி, அதிரப்பள்ளி மக்கள் சங்க சமிதி சார்பில், மாலை, 6:30 மணிக்கு தீ பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெற்றிலைப்பாறை பாலம் அருகே துவங்கிய ஊர்வலம், ஆரூர்முழி மையத்தில் நிறைவடைந்தது. அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அதிரப்பள்ளி ஊராட்சி தலைவர் ரிஜேஷ் தலைமை வகித்தார். வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்காத வனத்துறையை கண்டித்து கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், 500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு தீ பந்தம் ஏந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.