வனப்பகுதி ரிசார்ட்களில் இரைச்சல் கூடாது புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு போலீசார் கிடுக்கிப்பிடி!

0
12

பெ.நா.பாளையம்: புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போதையில் வாகனம் ஓட்டினால், வாகனம் பறிமுதல் செய்யப்படும். வனப்பகுதி அருகே உள்ள ரிசார்ட்களில் அதிக இரைச்சல், பட்டாசு வெடித்தல் கூடாது என, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆங்கில புத்தாண்டை ஒட்டி பாதுகாப்பாக புத்தாண்டை கொண்டாட, பொதுமக்களுக்கு போலீசார் பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளனர். பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., பொன்னுசாமி தலைமையில் தடாகம் போலீஸ் ஸ்டேஷனில் ஆனைகட்டி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள ரிசார்ட் உரிமையாளர்களுக்கான புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி அறிவுரை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

சிசிடிவி பொருத்த வேண்டும்

அதில், அனைத்து தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், லாட்ஜ்கள், தனிப்பட்ட பண்ணை வீடு ஆகியவற்றில் எந்த வகையான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, எவ்வளவு நபர்கள் கலந்து கொள்வார்கள் என்ற தகவலை காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். மேடை அமைத்து விழா நடைபெறும் என்றால், மேடையின் உறுதி தன்மை சான்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

சிசிடிவி’ கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும். கேமரா இல்லையெனில், கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். கூட்டம் அதிகமாக வரும் பட்சத்தில், தனியார் காவலர்களை பணியில் அமர்த்த வேண்டும். கலந்து கொள்பவர்களின் விபரங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும். காவல்துறை பாதுகாப்பு வேண்டும் என விரும்பினால், தொடர்புடைய காவல் நிலையத்தை அணுகி மனு செய்ய வேண்டும்.

வனத்துறையினர் அறிவுரை

கலை நிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாச நடனங்கள் மற்றும் கஞ்சா, அபின் மற்றும் பலதரப்பட்ட போதை பொருட்கள் பயன்படுத்த முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

நீச்சல் குளம் உள்ள இடங்களில் உயிர் பாதுகாப்பு கருவிகள் இருக்க வேண்டும். மது அருந்திய நிலையில் யாரையும் குளிக்க அனுமதிக்க கூடாது. அனுமதி இன்றி, பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாமல் மலையேற்றம் செய்யக்கூடாது என, போலீசார் அறிவுறுத்தினர்.

இதே போல வனத்துறையினர் வழங்கிய அறிவுரையில்,’ வனப்பகுதியில் ஒட்டியுள்ள ரிசார்டுகளில் அதிக ஓசை எழுப்பாமல் புத்தாண்டு கொண்டாட்டம் இருக்க வேண்டும். பட்டாசுகள் வெடிக்கவும், அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.

இரவு, 7:00 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் ரிசார்ட் வெளிப்பகுதியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். வனத்துறையினரின் தடையை மீறி, வனப்பகுதிகளில் இரவு நேரத்தில் வாகனங்களில் சுற்றினால், வாகனங்கள் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்படும். மலைப்பகுதியில் கடும் பனி காரணமாக புற்கள் காய்ந்து காணப்படுகின்றன.

புத்தாண்டை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகள் அதில் தீ மூட்டினால், எளிதில் வனங்களுக்கு தீ பரவும் அபாயம் உள்ளது. எனவே வனப்பகுதி மற்றும் அதன் அருகே தீ மூட்ட தடை செய்யப்பட்டுள்ளது.

வனப்பகுதி அருகே யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இருந்தால், அதை துன்புறுத்தும் வகையில் வாகனங்களை இயக்கக் கூடாது.ரிசார்ட்களில் வாணவேடிக்கைகள் கூடாது. போதையில் வாகனங்களை தாறுமாறாக இயக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்’ என்றனர்.