மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனப்பகுதியில், தண்ணீர் தொட்டிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.
மேட்டுப்பாளையம் வனப்பகுதி, 10,000 ஹெக்டர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. இந்த வனப் பகுதியில் பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, வனப்பகுதிகளில் மழை நீர் வரும் ஓடைகளில், குட்டைகள் அமைத்தும், தடுப்பணைகளையும் வனத்துறையினர் கட்டியுள்ளனர். பல இடங்களில் தண்ணீர் தொட்டிகளையும் கட்டி உள்ளனர்.
வெயில் காலம் துவங்கியதை அடுத்து, வனப்பகுதியில் உள்ள தடுப்பணைகள், குட்டைகளில் தண்ணீர் வற்றிவிட்டது.
வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, வனத்துறையினர் தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்து, தண்ணீர் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாவது:
மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் புலிக்குட்டை, சந்தன சோலை, காராச்சி குட்டை, நெல்லித்துறை ஆகிய வனப்பகுதிகளில், வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, 18 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி, வன விலங்குகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட உள்ளது. அனைத்து தண்ணீர் தொட்டிகளையும், சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் போர்வெல் வாயிலாக, 5 தொட்டிகளுக்கும், சோலார் முறையில் நான்கு தொட்டிகளுக்கும் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகின்றன. போர்வெல் மற்றும் சோலார் இல்லாத தண்ணீர் தொட்டிகளுக்கு, டிராக்டரில் தண்ணீர் கொண்டு சென்று, நிரப்பும் பணி நடைபெறுகிறது. இவ்வாறு, ஜோசப் ஸ்டாலின் கூறினார்.