வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா

0
101

மேட்டுப்பாளையத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

வனபத்ரகாளியம்மன் கோவில்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் பிரசித்தி பெற்ற வனபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆடி குண்டம் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குண்டம் திருவிழா நடைபெறவில்லை.

இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து வனபத்ரகாளியம்மன் கோவிலில் 29-வது ஆடி குண்டம் திருவிழா கடந்த 19-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.

அம்மன் ஊர்வலம்

விழாவின் 8-வது நாளான நேற்று குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. குண்டம் இறங்குவதற்காக கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று முன்தினம் காலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணமாக இருந்தனர். இவர்கள் நேற்று அதிகாலை முதலே குண்டம் இறங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

அதிகாலை 3 மணிக்கு கோவை பொதுப்பணித்துறை ஸ்ரீ அம்மன் அறக்கட்டளை சார்பில் பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மன் பூ பல்லக்கில் நீல நிற ரவிக்கை, சந்தன நிற பட்டுப்புடவை அணிந்து எழுந்தருளி ஊர்வலமாக வந்தார். ஊர்வலத்தை ஸ்ரீஅம்மன் அறக்கட்டளை தலைவர் வெங்கடுபதி, தலைமை பொறியாளர் முத்துசாமி, செயற்பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

குண்டம் இறங்கினர்

அம்மன் ஊர்வலம் காலை 6 மணிக்கு பீமன், பகாசுரன் சந்நிதி முன்பு குண்டம் இறங்கும் இடத்தை அடைந்தது. அதனைத் தொடர்ந்து தலைமை பூசாரி ரகுபதி மலர் கிரீடம் அணிந்தும் கையில் வேலெடுத்தும் குண்டத்தை வலம் வந்து சிறப்பு பூஜைகளை செய்தார். பின்னர் பூசாரி குண்டத்தில் மல்லிகை பூச்செண்டு, எலுமிச்சை பழத்தை வீசி, குண்டத்தில் இறங்கினார். அவரை தொடர்ந்து உதவி பூசாரிகள் தண்டபாணி கற்பூர தட்டு எடுத்தும், மணிகண்டன் கோல அணிக்கூடை எடுத்தும், செல்வராஜ் சக்தி கரகம் எடுத்தும், சேகர் சிவன் கரகம் எடுத்தும் குண்டம் இறங்கினர்.

அவர்களை தொடர்ந்து ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ, போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியம், மணிகண்டன், மருதூர் ஊராட்சி தலைவர் பூர்ணிமா மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். ஒரு சில ஆண், பெண் பக்தர்கள் சக்தி கரகம் சிவன் கரகம் எடுத்தும், சிலர் கை குழந்தைகளுடன் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். காலை 6 மணிக்கு தொடங்கிய குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி, தமிழக இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஆனந்த், உதவியாளர் கருணாநிதி, தாசில்தார் மாலதி உள்பட கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வசந்தா கோவில் உதவி ஆணையரும் செயல் அலுவலருமான கைலாசமூர்த்தி கண்காணிப்பாளர் மல்லிகா மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். கோவில் உதவி பாதுகாவலர் சகாதேவன் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார்.

பாதுகாப்பு பணிகள்

ஆடி குண்டம் திருவிழாவையொட்டி மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் 15 பேர் கொண்ட சிறப்பு குழு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதேபோல மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் பக்தர்கள் குண்டம் இறங்கும் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்னர்.

போலீசார் சார்பில் கோவில் வளாகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு இருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செல்வராஜ், தென்னரசு மேற்பார்வையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

குண்டம் திருவிழாவையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.