வனக்கல்லூரி முதல்வர் தகவல் : சிவில் சர்வீஸ், ஆராய்ச்சி படிப்புக்கு முக்கியத்துவம்

0
87

மேட்டுப்பாளையம்; மாணவர்களுக்கு வெளிநாடுகளில் ஆராய்ச்சி படிப்பு மற்றும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பாடத்திட்டமும், அதற்கான வசதியும் செய்து தரப்படும், என, வனக்கல்லூரி முதல்வர் நிஹார் ரஞ்ஜன் தெரிவித்தார்.

மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கு உட்பட்ட, வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு முதல்வராக பாலசுப்பிரமணியம் பணியாற்றி வந்தார். இவர் மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, தமிழக முதன்மை வன பாதுகாவலராக பணியாற்றி வந்த நிஹார் ரஞ்ஜன், வனக்கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டார். இவருக்கு பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இது குறித்து முதல்வர் நிஹார் ரஞ்ஜன் கூறியதாவது: வனக் கல்லூரியில் படித்த மாணவர்கள் அதிகம் பேர், ஐ.எப்.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் சமீப காலமாக இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, மிகவும் குறைந்துள்ளது. இதை மீண்டும் அதிகப்படுத்தவும், மாணவர்கள் சிவில் சர்வீஸ் படிக்கவும், ஏற்பாடு செய்யப்படும். மேலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஆராய்ச்சி மேற்படிப்பு படிக்கவும், மாணவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுப்பதே, எனது முதல் பணியாகும்.

வனக்கல்லூரி சார்பில், தரச் சான்று வழங்க தகுதி உள்ளது. எனவே வனம் சம்பந்தமான ஆராய்ச்சியில் உள்ளதற்கு, கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில், தரச் சான்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கும் தேவையான நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.