கோவை; சர்வதேச சந்தையில் விலையேற்றம் மற்றும் நம் நாட்டில் இறக்குமதி வரி உயர்வு காரணமாக, பாமாயில் மற்றும் சூரிய காந்தி எண்ணெய் மட்டுமின்றி, தேங்காய் எண்ணெய் விலையும், உயர்ந்துள்ளது.
சமையலுக்கு மிக அத்தியாவசிய பொருளாக எண்ணெய் உள்ளது. குறிப்பாக, பாமாயில் மற்றும் சூரிய காந்தி எண்ணெய், அதிக மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இவ்விரு எண்ணெய்கள், பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
பாமாயில், மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும், சூரியகாந்தி எண்ணெய் ரஷ்யா நாடுகளில் இருந்தும், அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், உள்ளூர் சந்தையில் இதன் விலை உயர்ந்துள்ளது.
கோவையில் நேற்றைய நிலவரப்படி, தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர் 280 ரூபாய், கடலை எண்ணெய் 230 ரூபாய், நல்லெண்ணெய் 330 ரூபாய், சூரிய காந்தி எண்ணெய் 160 ரூபாய், பாமாயில் 152 ரூபாய், ரைஸ் ஆயில் 150 ரூபாய்க்கு விற்பனையானது.
இதுகுறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் இருதயராஜா கூறியதாவது:
சர்வதேச போர் காரணமாகவும், இறக்குமதி வரி உயர்வு காரணமாகவும் பாமாயில், சூரிய காந்தி எண்ணெய் விலை அதிகரித்து காணப்படுகிறது. பொதுவாக, மொத்த எண்ணெய் விற்பனையில், 40 சதவீதம் பாமாயில் எண்ணெயின் பங்கு இருக்கும்.
இதன் விலையை அடிப்படையாகக் கொண்டுதான், பிற எண்ணெய்களின் விலை நிர்ணயிக்கப்படும். இதன் விலை உயர்வால், பிற எண்ணெய்களின் விலையும் உயர்ந்து இருக்கிறது. தேங்காய், கொப்பரை வரத்து குறைவு காரணமாக, தேங்காய் எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது.
தேங்காய் எண்ணெய் 210 ரூபாயில் இருந்து, 280 ரூபாயாகவும், சூரியகாந்தி எண்ணெய் 120 ரூபாயில் இருந்து 160 ரூபாயாகவும், பாமாயில், 90 ரூபாயில் இருந்த 152 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. பாமாயில், சூரிய காந்தி எண்ணெய் அதிக பயன்பாட்டில் இருந்தது.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், அரசு இறக்குமதி வரியை உயர்த்தியதாக தெரிவித்தது. ஆனால், இதனால் பொதுமக்கள்தான் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். எண்ணெய்களின் விலை குறைய, இப்போதைக்கு வாய்ப்பு இல்லை. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
சமையல் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள உயர்வு, ஏழை மக்களை பாதித்துள்ளது.