வண்டி வாடகை ரூ.1,000 ரேஷன் பொருட்கள் இலவசம் இது எப்படி இருக்கு!

0
21

மேட்டுப்பாளையம் : அரசு வழங்கும் இலவச ரேஷன் பொருட்களை கொண்டு செல்ல, 1,000 ரூபாய் வண்டி வாடகை வழங்க வேண்டும். இந்த அவல நிலையை போக்க, சாலை வசதி வேண்டி, கடம்பன்கோம்பை, ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரமடை ஊராட்சி ஒன்றியம், நெல்லித்துறை ஊராட்சிக்கு உட்பட்டது கடம்பன்கோம்பை மலைவாழ் கிராமம். பில்லூர் அணையில் இருந்து, 5 கிலோமீட்டரில், மலைப்பகுதியில் அமைந்துள்ளது.

இங்கு, 30க்கும் மேற்பட்ட மலைவாழ் ஆதிவாசி மக்கள் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராமத்துக்கு செல்ல சரியான சாலை வசதி இல்லை. வனத்துறை சார்பில் அமைத்துள்ள சாலையில், ஆதிவாசி மக்கள் நடந்து சென்று வருகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால், மண் சாலை முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டதால், நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்கள் கூறியதாவது:

கடம்பன்கோம்பை மலைவாழ் கிராமத்தில், பரம்பரை பரம்பரையாக பல ஆண்டுகளாக ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நவீன காலத்தில், எங்கள் குடியிருப்பு பகுதிக்கு மின்சார வசதி, சாலை வசதி ஏதுமில்லை.

ரேஷன் பொருட்கள் வாங்க, எங்கள் கிராமத்தில் இருந்து, 3 கிலோமீட்டர் மலைப் பகுதியில் நடந்த வந்து, பில்லூர் அணை செல்லும் சாலையில் நின்றால், அவ்வழியாகச் செல்லும் வாகனங்களில் பில்லூர் அணைக்கு செல்வோம்.

அனைவரின் ரேஷன் பொருட்களையும், எங்கள் கிராமத்துக்கு ஜீப்பில் கொண்டு செல்ல வேண்டும். ஜீப்புக்கு 1,000 ரூபாய் வாடகை கொடுக்க வேண்டும். அரசு ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்கினாலும், அதை எங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்ல, ஜீப்புக்கு வாடகை செலுத்த வேண்டி உள்ளது.

எனவே, எங்கள் மலைவாழ் கிராமத்திற்கு செல்ல சாலை வசதியும், மின்சார வசதியும், அரசு செய்து தர வேண்டும். இவ்வாறு, மக்கள் கூறினர்.